கடந்த 2023ம் ஆண்டு திமுக சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் திமுக பேச்சாளரான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பற்றி அவதூறாகவும், தரக்குறைவாகவும் பேசினார். இது தொடர்பான வீடியோ வெளியாகி மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து ஆளுநர் மாளிகை துணை செயலாளர் பிரசன்னா ராமசாமி கொடுத்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணைகள் முடிவடைந்த நிலையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தரப்பில் சென்னை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மேல்முறையீட்டு மனுவில், ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களை முறையாக பரிசீலிக்காமல் எழும்பூர் நீதிமன்றம் தனக்கு தண்டனை விதித்துள்ளதாகவும், அரசினுடைய உரிய அனுமதி இல்லாமல் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட தனிநபர்கள் பாதிக்கப்பட்டவர்கள் யாருமே தனக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யாத நிலையில் காவல்துறை பதிவு செய்த இந்த வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த வாதத்தை ஏற்ற நீதிமன்றம், சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனைக்கு இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன்மூலம் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Comments are closed.