திமுக ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி ஊழல்: விசாரணை கமிஷன் அமைக்க கோரி கவர்னரிடம் மனு அளித்தோம்- எடப்பாடி பழனிசாமி பேட்டி…!
அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக நிர்வாகிகள் இன்று(06-01-2026) கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து ஒரு மனு அளித்தனர். இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், 2021 முதல் திமுக ஆட்சியில் நடந்த ரூ.4 லட்சம் கோடி ஊழல்கள் குறித்த பட்டியலை ஆதாரங்களுடன் கவர்னர் ஆர்.என்.ரவியிடம் கொடுத்துள்ளதாக தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
2021முதல் திமுக ஆட்சியில் நடந்த ஊழல் பட்டியலை ஆதாரங்களுடன் கவர்னரிடம் கொடுத்துள்ளோம். இதுதொடர்பாக விசாரணை கமிஷன் அமைத்து விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தியுள்ளோம். திமுக ஆட்சியில் தமிழ்நாடு கடன் சுமையில் இருக்கிறது. கடந்த 56 மாதங்களில், ரூ.4 லட்சம் கோடி கடன் வாங்கி இருக்கிறது. இதுதான் திமுகவின் சாதனை. ஊழலை தவிர திமுக எந்த நன்மையையும் செய்யவில்லை. விஞ்ஞான முறையில் ஊழல் செய்யக் கூடிய கட்சி திமுக. துறை வாரியாக நடந்த ஊழல்களை கொடுத்துள்ளோம். நகராட்சி நிர்வாகத்துறையில் ரூ.64 ஆயிரம் கோடி, ஊரக வளர்ச்சித்துறையில் ரூ.60 ஆயிரம் கோடி, கணிமவளத்துறையில் ரூ.60 ஆயிரம் கோடி, எரிசக்தி துறையில் ரூ.55 ஆயிரம் கோடி, டாஸ்மாக்கில் ரூ.50 ஆயிரம் கோடி ஊழல் செய்துள்ளனர். பத்திரப்பதிவுத் துறையில் ரூ.20 ஆயிரம் கோடியும், நெடுஞ்சாலைத் துறையில் ரூ.20 ஆயிரம் கோடியும், தொழில்துறையில் ரூ.8 ஆயிரம் கோடியும், பள்ளிக்கல்வி, வேளாண்மை மற்றும் சுகாதாரத்துறையில் தலா ரூ.5 ஆயிரம் கோடியும், சமூகநலத்துறையில் ரூ.4 ஆயிரம் கோடியும், இந்துசமய நலத்துறையில் ரூ.ஆயிரம் கோடியும், விளையாட்டுத்துறையில் ரூ.500 கோடி, சுற்றுலாத்துறை மற்றும் பால்வளத்துறையில் ரூ.250 கோடி ஊழல் செய்துள்ளனர். மொத்தமாக ரூ.4 லட்சம் கோடி திமுக ஆட்சியில் ஊழல் நடைபெற்றுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்த உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். அதேபோல் மாணவர்களுக்கான லேப்டாப் திட்டத்தை முன் கூட்டியே செயல்படுத்தி இருக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் 52 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் கொடுக்கப்பட்டுள்ளது. கல்லூரி திறந்தவுடன் லேப்டாப் கொடுத்திருக்க வேண்டும். அப்போதும் செய்யவில்லை. தற்போது கொடுக்கப்பட்டுள்ள லேப்டாப்பால் என்ன பயன்? திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதன் காரணமாகவே பொங்கல் பரிசாக ரூ.3 ஆயிரம் அறிவித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.