தி.மு.க.அமைச்சரின் படத்துடன் சில்வர் டிரம், சேலை மற்றும் பரிசுப் பொருட்கள் விநியோகம்… சமூக வலைதளங்களில் வைரல்!
தமிழகத்தில் வருகிற 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை சந்திக்க தற்போது இருந்தே கட்சிகள் தேர்தல் பணிகளில் ஈடுபட தொடங்கி விட்டன. இழந்த ஆட்சியை எப்படியாவது மீண்டும் பிடித்து விட வேண்டும் என்று அதிமுகவும், ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள திமுகவும் வரிந்து கட்டிக்கொண்டு செயல்பட்டு வருகின்றன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி “மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். “ஓரணியில் தமிழ்நாடு” என்ற பெயரில், வார்டு வார்டாக உறுப்பினர் சேர்க்கை மற்றும் அமைப்புப் பணிகளில் திமுக ஈடுபட்டு வருகிறது. நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகமும் இந்த முறை முதல் முறையாக கோதாவில் குதிக்கிறது. அவர்களும் கட்சிப் பணிகள், மாநாட்டு பணிகள் என தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் தி.மு.க.வில் உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டுள்ள பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு வாட்ச், குடை, மொபைல், பேனா என கிப்ட் பொருட்களை வழங்கி வருவதாக கூறப்படுகிறது. முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியனின் படத்துடன் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட சில்வர் டிரம் மற்றும் சேலை ஆகியவை, திருவிடைமருதூர் தொகுதியில் வீடு வீடாக வழங்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக, அ.தி.மு.க., த.வெ.க., கட்சியினர், சமூக வலைதளங்களில் இந்த படங்களை பதிவிட்டு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது சம்பந்தமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
Comments are closed.