Rock Fort Times
Online News

தமிழக வெற்றிக் கழகத்தில் ஒழுங்கு நடவடிக்கைக் குழு அமைப்பு- விஜய்…!

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஒழுங்கு நடவடிக்கைக் குழு அமைத்து அக்கட்சியின் தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தலைமை ஒழுங்கு நடவடிக்கைக் குழு மற்றும் மண்டல ஒழுங்கு நடவடிக்கைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கட்சியின் கொள்கை குறிக்கோளுக்கு எதிராக செயல்படுவோர் மீது அக்குழு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமை ஒழுங்கு நடவடிக்கைக் குழுவில் இருவர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். வடக்கு மண்டலம், மேற்கு மண்டலம், தெற்கு மண்டலம், மத்திய/கிழக்கு மண்டலம் என நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒரு மண்டலத்துக்கு நான்கு பேர் வீதம் 16 பேர் மண்டல ஒழுங்கு நடவடிக்கைக் குழு நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், கழக விதிகளின்படி, தமிழக வெற்றிக் கழகத் தலைவரே, தலைமை ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் தலைவர் ஆவார். இதன்படி, பின்வரும் தோழர்களை, கழகத் தலைமை ஒழுங்கு நடவடிக்கை குழுவின் உறுப்பினர்களாக நியமனம் செய்கிறேன். 1. என். ஆனந்த்- கழகப் பொதுச் செயலாளர் 2. சி.விஜயலட்சுமி, மாநிலச் செயலாளர், உறுப்பினர் சேர்க்கை அணி. இக்குழுவானது, கழகத்தின் அனைத்து நிலைகளிலும் உள்ள நிர்வாகிகளும் தோழர்களும் கழகக் கட்டுப்பாட்டை மீறி, கொள்கைகள், கோட்பாடுகள், குறிக்கோள்களுக்கு எதிராகச் செயல்பட்டால் அவர்கள் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் கழக நிர்வாக வசதிக்காகத் தமிழ்நாட்டில் உள்ள வருவாய் மாவட்டங்கள் வடக்கு, மேற்கு, தெற்கு மற்றும் மத்திய, கிழக்கு என நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி இந்த நான்கு மண்டலங்களில் உள்ள வருவாய் மாவட்டங்களுக்குட்பட்ட கழக மாவட்டங்களுக்கு மண்டல ஒழுங்கு நடவடிக்கைக் குழுக்கள் நியமிக்கப்படுகின்றன. இந்த ஒழுங்கு நடவடிக்கைக் குழுக்கள் தங்களுக்குரிய மண்டலங்களில் கழக நிர்வாகிகளும் தோழர்களும் கழகக் கட்டுப்பாட்டை மீறி, கொள்கைகள், கோட்பாடுகள், குறிக்கோள்களுக்கு எதிராகச் செயல்பட்டால், அவர்கள் மீது கழக விதிகளின்படி உரிய நடவடிக்கைகளை, தலைமை ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் வழிகாட்டுதல் மற்றும் அனுமதியின் பேரில் மேற்கொள்ளும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். இக்குழுக்களுக்குக் கழக நிர்வாகிகளும் தோழர்களும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார். திருச்சி வடக்கு மண்டலத்திற்கு எம்.ரவிசங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்