Rock Fort Times
Online News

பிரபல வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி கடன் பெற்று மோசடி:- வைர வியாபாரி மெஹூல் சோக்சி பெல்ஜியத்தில் கைது…!

மும்பையைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி, அவரது உறவினர் மெஹூல் சோக்சி உள்ளிட்டோர், மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி கடன் பெற்று அதை திருப்பி செலுத்தாமல், 2018ல் வெளிநாடு தப்பினர். இதுதொடர்பாக அமலாக்கத் துறை மற்றும் சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. நீரவ் மோடி, லண்டனில் கைது செய்யப்பட்டார். அவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், நீரவின் சொத்துக்களை அமலாக்கத் துறை பறிமுதல் செய்து விட்டது. மெஹூல் சோக்சி மனைவி பிரீத்தி சோக்சி பெல்ஜியம் குடியுரிமை பெற்றவர். அவர் மூலமாக சோக்சி பெல்ஜியம் குடியுரிமை பெற்று தங்கி உள்ளார். இது தற்காலிக குடியுரிமை என்றும், ஒருவேளை பெல்ஜியத்தின் நிரந்தர குடியுரிமையை சோக்சி பெற்றால் அவர் எளிதாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று வர முடியும். இதனால், சோக்சியை பெல்ஜியத்தில் இருந்து நாடு கடத்த இந்திய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வந்தனர். இது தொடர்பாக பெல்ஜியம் அதிகாரிகளிடம் இந்திய அதிகாரிகள் பேச்சு நடத்தினர். அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையின் பேரில் பெல்ஜியத்தில் மெஹூல் சோக்சி கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய புலனாய்வுப் பிரிவின் (சி.பி.ஐ.,) கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்