திருச்சி சத்திரம் பேருந்து நிலைய வளாகத்துக்குள் பாசிமணிகள் விற்க அனுமதிக்க கோரி நரிக்குறவ இன பெண்கள் தர்ணா…!
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து பல்வேறு இடங்களுக்கு நகர மற்றும் புறநகர் பேருந்துகள் அதிகளவில் சென்று வருகின்றன. இதனால், பேருந்து நிலைய வளாகத்திற்குள் கூட்டம் நிரம்பி வழியும். இதற்கிடையே பேருந்து நிலைய வளாகத்திற்குள் நரிக்குறவ இன பெண்கள் தரைக் கடைகள் அமைத்து பாசிமணி, மற்றும் ஊசிகள், பொட்டுகள் விற்று பிழைப்பு நடத்தி வருகின்றனர். அவர்களை வியாபாரம் செய்ய விடாமல் கோட்டை காவல் துறையினர் விரட்டுவதாகவும், இந்தச் செயலை கண்டித்தும், 2014 தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்பு சட்டப்படி தங்களை வியாபாரம் செய்ய அனுமதிக்க கோரியும், பழங்குடி இன நரிக்குறவ பெண்கள் மற்றும் தரைக்கடை, தள்ளுவண்டி வியாபாரிகள் சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி இளநிலை பொறியாளர் அலுவலக வளாகத்தில் குடும்பத்துடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு தரைக்கடை வியாபாரிகள் சங்க மாவட்ட தலைவர் கணேசன் தலைமை வகித்தார். போராட்டத்தை விளக்கி சிஐடியூ மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், தரைக்கடை வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் செல்வி, மாவட்ட பொருளாளர் சுரேஷ் ஆகியோர் பேசினர். பின்னர் சிறிது நேரம் கோஷங்கள் எழுப்பி விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Comments are closed.