Rock Fort Times
Online News

சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக தர்மாதிகாரி பதவியேற்பு…!

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் இன்று (மார்ச் 06) நடைபெற்ற பதவியேற்பு விழாவில் சென்னை உயர் நீதிமன்றத்தின் 55-வது தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதைத் தொடர்ந்து தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பூங்கொத்து வழங்கி வாழ்த்துத் தெரிவித்தார். விழாவில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் மற்றும் தமிழ்நாடு அரசு சார்பில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, துணை சபாநாயகர் பிச்சாண்டி, அரசு தலைமை வழக்கறிஞர் ராமன், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயகுமார், சி.வி.சண்முகம் எம்.பி., உயர் நீதிமன்ற நீதிபதிகள், காவல்துறை அதிகாரிகள், அரசு உயரதிகாரிகள், வழக்கறிஞர்கள், முன்னாள் தலைமை நீதிபதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு ஆளுநராக பணியாற்றி வந்த ஆர்.என்.ரவியை மேற்குவங்க மாநிலத்துக்கு ஆளுநராக நியமித்து குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு நேற்று (மார்ச் 05) உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை (மார்ச் 07) மேற்கு வங்கத்துக்கு சென்று ஆளுநராக பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி பங்கேற்ற கடைசி அரசு நிகழ்ச்சியாக இது அமைந்துள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்