பொது இடங்களில் மது அருந்துவதை தடுக்க தவறும் போலீசார் மீது டி.ஜி.பி.நடவடிக்கை எடுக்க வேண்டும்…* உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
பொது இடங்களில் மது அருந்துவது உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்பாக பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத போலீசார் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என டி.ஜி.பி.,க்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், பொது இடங்களில் மது அருந்துவோரை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதுடன், மது விற்பனையை கட்டுப்படுத்த உத்தரவிடக்கோரி அரியலூர் மாவட்டம், உடையார்பாளையத்தைச் சேர்ந்த எஸ்.ராமசாமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், பொது இடங்களில் மது அருந்துவோரை தடுக்க, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக, டி.ஜி.பி., சார்பில் அனைத்து போலீஸ் அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது’ என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், பொது இடங்களில் மது அருந்தும் நபர்களால் ஏதேனும் பிரச்சனைகள் மற்றும் தொந்தரவு ஏற்பட்டால் அது தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவிக்க வசதியாக சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய அதிகாரிகளின் தொலைபேசி எண், மின்னஞ்சல் மற்றும் வாட்ஸாப் எண் வழங்க வேண்டும். பொது இடங்களில் மது அருந்துவது உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்பாக பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தவறும் போலீஸ் அதிகாரிகள் மீது, டி.ஜி.பி., ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுக்கடைக்கு ஒதுக்கப்பட்ட இடம் தவிர, பொது இடங்களில் மது அருந்துவதை கட்டுப்படுத்த அவ்வப்போது ரோந்துப் பணியை போலீசார் மேற்கொள்ள வேண்டும். இந்த உத்தரவை மாநிலம் முழுவதும் செயல்படுத்த வேண்டும். இதுசம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள ஒவ்வொரு போலீஸ் அதிகாரியின் கடமையாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Comments are closed.