முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர், தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது. சூரபத்மனை வதம் செய்த புனிதத் தலம், தெய்வானையுடன் திருமணம் நடைபெற்ற தலம், மேலும் அறுபடை வீடுகளில் கடற்கரையில் அமைந்த ஒரே தலமாகவும் திருச்செந்தூர் பெருமை பெறுகிறது. இந்தத் தலத்திற்கு தினசரி உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் திரளாக வருகை தந்து, சாமி தரிசனம் செய்து நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுகின்றனர். சமீப ஆண்டுகளில், ஒரு ஜோதிடர் கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவிய தகவலின்படி, ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி இரவில் கடற்கரையில் தங்கி நிலவொளியில் தியானித்து, மறுநாள் அதிகாலை புனித நீராடி சாமி தரிசனம் செய்தால் வாழ்க்கையில் பெரும் பலன்கள் கிடைக்கும் என நம்பிக்கை அதிகரித்துள்ளது. இதனால் பவுர்ணமி நாட்களில் கடற்கரை பகுதி மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. அதே சமயம், சமீப காலங்களில் கோவில் முன்பு தங்கும் பக்தர்களிடம் திருட்டு மற்றும் பொருட்கள் காணாமல் போவது போன்ற புகார்கள் அதிகரித்துள்ளன. இதனால் பக்தர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் கோவில் நிர்வாகம் புதிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கோவில் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், மழை மற்றும் இயற்கை சீற்றம் ஏற்படும் காலங்களில் மட்டும் கடற்கரையில் தங்குவதற்கு தற்காலிகக் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. பக்தர்கள் பாதுகாப்பிற்காக அத்தகைய நாட்களில் இரவு நேரங்களில் கடற்கரையில் தங்க அனுமதி வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் பாதுகாப்பாக தங்க கோவில் வளாகங்கள் மற்றும் மண்டபங்கள் வழியாக தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றும் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பக்தர்கள் கோவில் நிர்வாகம் வெளியிட்ட அறிவுறுத்தல்களை பின்பற்றி, பாதுகாப்பாக தரிசனம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Comments are closed.