திருச்சி திருவெறும்பூர் நொச்சிவயல்புதூர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி வித்யா லட்சுமி. கடந்த ஆண்டு மே 21ம் தேதி மர்மமான முறையில் இறந்தார். அவரது வாயில் சிலர் விஷம் ஊற்றி கொலை செய்ததாக புகார் எழுந்தது. பின்னர் திருவெறும்பூர் போலீசார் விசாரணை நடத்தி தற்கொலை வழக்கு பதிவு செய்தனர். மேலும் தற்கொலைக்கு தூண்டியதாக ஒருவரை கைது செய்தனர். அவர், கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மீதமுள்ள குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும், அந்த வழக்கில் மறு விசாரணை நடத்த வலியுறுத்தியும்,நீதி விசாரணை வேண்டியும் தேவேந்திரகுல வேளாளர் பேரமைப்பினர் இன்று திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். இந்தப் போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்தது. இருப்பினும் தேவேந்திரகுல வேளாளர் பேரமைப்பின் தலைவர் அய்யப்பன், செயலாளர் வக்கீல் சங்கர் மற்றும் நொச்சிவயல் கிராமத்தைச் சேர்ந்த வித்யாலட்சுமியின் குடும்பத்தினர், உறவினர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர். அவர்கள் கண்டன கோஷம் எழுப்பியபடி கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் வழியாக உள்ளே செல்ல முயன்றனர். அப்போது பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டிருந்த போலீசார் அய்யப்பன், சங்கர் உள்ளிட்ட 15 பேரை கைது செய்தனா். இந்த போராட்டத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
