டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம் தீவிரவாத தாக்குதலாக இருக்கக்கூடும் என விசாரணையில் கருதப்பட்டதால், தற்போது இந்த வழக்கு என்ஐஏவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. டெல்லி செங்கோட்டை அருகே நேற்றிரவு 7 மணியளவில் கார் ஒன்று வெடித்து சிதறியது. இதில், காரின் அருகே இருந்த வாகனங்கள் பல அடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டன. இந்த கோர சம்பவத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். 16-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி காவல் துறை மட்டுமின்றி என்ஐஏ, என்எஸ்ஜி போன்ற அமைப்புகளும் விசாரணை நடத்தி வந்தன. இதில், அந்த காரில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு இருந்தது கண்டறியப்பட்டது. மேலும், உமர் நபி என்பவர் காரை ஓட்டி வந்ததும், அவர் காஷ்மீரை சேர்ந்த மருத்துவர் என்பதும் தெரிய வந்தது. இந்த குண்டுவெடிப்பில் உமர் நபியும் உயிரிழந்ததால் அவர் பற்றிய தகவல்களை விசாரணை அமைப்புகள் சேகரித்து வருகின்றன. மேலும், இது தற்கொலை தாக்குதலாக இருக்குமோ? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இது ஒருபுறம் இருக்க, பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது அமைப்புக்கும், உமர் நபிக்கும் தொடர்பு இருப்பதாக உளவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதையடுத்து, இது தொடர்பான விசாரணை மேலும் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம் தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என கருதப்படுவதால், தற்போது இந்த வழக்கு என்ஐஏவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, டெல்லி காவல் துறை, என்எஸ்ஜி ஆகிய அமைப்புகள் இதுவரை சேகரித்த தடயங்களையும், தகவல்களையும் என்ஐஏவிடம் ஒப்படைத்து வருகின்றன. என்ஐஏ என்பது முழுக்க, முழுக்க தீவிரவாதிகளுக்கு எதிரான புலனாய்வு அமைப்பு ஆகும். எந்தெந்த பயங்கரவாத அமைப்புகள் எப்படிப்பட்ட தாக்குதல்களை நடத்தும் என்பன போன்ற விஷயங்களில் என்ஐஏவுக்கு மிகுந்த அனுபவம் உள்ளதால், இனி இந்த வழக்கின் விசாரணை வேகமெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments are closed.