முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறு வழக்கு: சீமானிடம் விசாரணை நடத்த தனி போலீஸ் அதிகாரி நியமனம்…!
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலின் போது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன், தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாகப் பேசி பாட்டு பாடியதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், சாட்டை துரைமுருகன் காவல்துறையினரால் தென்காசி மாவட்டத்தில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதுதொடர்பாக பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “கொலை செய்பவர்கள், சாராயம் காய்ச்சுபவர்கள் மீது பாயாத வழக்கு மேடையில் பேசியதற்காகப் பாய்கிறது. கருணாநிதி குறித்த பாடலை மேடையில் பாடியதற்காக கைது செய்திருக்கிறார்கள். அந்தப் பாடலை எழுதியவர், பாடியவரை கைது செய்தார்களா? இப்போது நான் அந்தப் பாடலை பாடுகிறேன். என்மேல் வழக்குப்பதிவு செய்யுங்கள்” என்று கூறிய சீமான் கருணாநிதி குறித்த அவதூறுப் பாடலை பத்திரிகையாளர்கள் முன்பு பாடிக் காட்டினார். இந்நிலையில், முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து அஜேஷ் என்பவர் பட்டாபிராம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின்பேரில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், மாநில எஸ்.சி., எஸ்.டி. ஆணையத்திடம் சீமான் குறித்து அவர் புகார் அளித்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய ஆணையம், சீமான் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையருக்கு உத்தரவிட்டு இருந்தது. மாநில எஸ்.சி., எஸ்.டி. ஆணையத்தின் உத்தரவின்பேரில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பட்டாபிராம் காவல் துறையினர், சீமான் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்தநிலையில் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த விசாரணை அதிகாரியாக பட்டாபிராம் உதவி ஆணையர் சுரேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் விசாரணையை தொடங்குவார் என்று தெரிகிறது.

Comments are closed.