திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த நவம்பர் மாதம் 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கோலாகலமாக நடந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக கடந்த 3-ந் தேதி கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து 11 நாட்கள் பக்தர்களுக்கு மகா தீபம் காட்சியளித்தது. இதன் பின்னர் மகா தீபம் ஏற்றப்பட்ட கொப்பரை மலை உச்சியில் இருந்து அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. கடந்த 3-ந் தேதி ஆருத்ரா தரிசனத்தன்று தீபச்சுடர் மை (தீப மை) அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளும் நடராஜருக்கு வைக்கப்பட்டது. இந்நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் ஐந்தாம் பிரகாரத்தில், திருமஞ்சன கோபுரம் அருகே தீப மை விற்பனை இன்று( ஜன. 8) தொடங்கியது. ஒரு மை டப்பா ரூ.10 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒருவருக்கு 20 டப்பாக்கள் வரை வழங்கப்படும். காலை 10 முதல் 1 மணி வரை, பிற்பகல் 3 முதல் மாலை 6 மணி வரை விற்பனை நடைபெறும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.