திருச்சி பறவைகள் பூங்கா நுழைவாயிலில் போக்குவரத்து காவலர்கள் நியமிக்க முடிவு: கலெக்டர் பிரதீப்குமார்…!
திருச்சி மாவட்டத்தில் முக்கொம்பு, பட்டாம்பூச்சி பூங்கா, பச்சமலை ஆகியவற்றைத் தவிர்த்து பொதுமக்களுக்கு குறிப்பிடும்படியாக பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய இடங்கள் இல்லை என்ற குறை நீண்ட ஆண்டுகளாகவே இருந்து வந்தது. இதனை நிவர்த்தி செய்யும் வகையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார், காவிரிக் கரையில் பறவைகள் பூங்கா அமைக்கும் திட்டத்தை முன்வைத்தார். தமிழக அரசும் இதனையேற்று நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பணிகளை முடிக்க அனுமதியளித்தது. இதன்படி, அந்தநல்லூர் ஒன்றியத்துக்குள்பட்ட கம்பரசம்பேட்டையில் காவிரிக் கரையோரம் இடம் தேர்வு செய்யப்பட்டு கடந்தாண்டு மே மாதம் பணிகள் தொடங்கின. இந்தப் பறவைகள் பூங்காவானது சுமார் 6 ஏக்கர் பரப்பளவில், 60 ஆயிரம் சதுர அடியில் 30 அடி உயரத்தில் ரூ18.63 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இந்தப் பூங்காவில் இயற்கையான சூழ்நிலையில் அரிய வகை மற்றும் வெளிநாட்டு பறவைகள், வீட்டு விலங்குகள் உள்ளன.
இவ்வினங்களை வளர்த்தல் மற்றும் பாதுகாத்தலுடன் கூடுதலாக பறவைகள் இன பெருக்கத்திற்கென தனி அமைப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை ஆகிய பண்டைய தமிழர்களின் ஐந்திணை வாழ்வியலை பிரதிபலிக்கும் விதமாக அமைவிடங்களும், புல்வெளிகள், சிற்பங்கள், நீருற்றுகள், இடை நிறுத்தப்பட்ட பாலங்கள், வரைபடங்கள் என பல அம்சங்களை உள்ளடக்கியதாக இந்தப் பூங்கா கட்டமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த பூங்காவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டுக்காக அர்ப்பணித்து வைத்தார். இதன் தொடர்ச்சியாக திங்கள்கிழமையே பூங்கா பயன்பாட்டுக்கு வந்தது. ஆனால், நுழைவுக் கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.200, சிறியவர்களுக்கு ரூ.150 என்பது மக்களுக்கு பெரிதும் சுமையாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், பூங்காவுக்கு வரும் வாகனங்கள் நிறுத்த போதிய வசதிகள் இல்லை. வாகனங்களால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்தை ஒழுங்குபடுத்த காவலர்களை நியமிக்க வேண்டும். போக்குவரத்து நெரிசலுக்கு இடம் இல்லாத வகையில் வாகன நிறுத்தம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.
இந்தநிலையில், பறவைகள் பூங்காவில் ஆட்சியர் மா.பிரதீப்குமார் ஆய்வு மேற்கொண்டார். கட்டணச்சீட்டு வழங்கும் இடம் தொடங்கி அனைத்து இடங்களைப் பார்வையிட்டு, பொதுமக்களிடம் நிறை, குறைகளை கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரிணி மற்றும் பூங்காவை நிர்வகிக்கும் தனியார் நிறுவன அலுவலர்கள் உடனிருந்தனர். பூங்காவுக்கு வரும் பொதுமக்களுக்கு சிறந்த சேவை வழங்கவும், எந்தவித புகார்களுக்கும் இடம் அளிக்காத வகையில் ஒப்பந்த நிறுவனப் பணியாளர்கள் பணிபுரிய ஆட்சியர் அறிவுறுத்தினார். மேலும், காவல் துறையினருடன் ஆலோசனை நடத்தி பூங்கா நுழைவு வாயிலில் போக்குவரத்து காவலர்களை பணியமர்த்தவும், அய்யாளம்மன் படித்துறை அருகே சுமார் 7 ஏக்கர் பரப்பில் வாகன நிறுத்தும் வசதிகள் செய்து தரவும் வலியுறுத்தினார்.
Comments are closed.