திருச்சியில் பட்டப்பகலில் பயங்கரம்: சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வீட்டிற்குள் தஞ்சம் புகுந்த வாலிபர் வெட்டி படுகொலை…!
திருச்சி, பீமநகர் கீழத்தெருவை சேர்ந்த தாமரைச்செல்வன் (26) என்ற தனியார் நிறுவன ஊழியர் காவலர் குடியிருப்புக்குள் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே தாமரைச்செல்வன் பைக்கில் வந்த போது பின்னால் பைக்கில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவரை கீழே தள்ளி சாலையில் வெட்ட முயன்றுள்ளனர். அவர் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக மார்சிங்பேட்டை காவலர் குடியிருப்பில் உள்ள எஸ்.எஸ்.ஐ. ஒருவரது வீட்டிற்குள் நுழைந்துள்ளார். ஆனாலும், விடாது துரத்தி வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் அரிவாளால் தாமரைச்செல்வனை வெட்டி கொலை செய்துவிட்டு கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பாலக்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தாமரைச்செல்வன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சியில் பட்டப் பகலில் போலீஸ் குடியிருப்புக்குள் வைத்து இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.