Rock Fort Times
Online News

திமுக ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன- திருச்சியில் அண்ணாமலை பேச்சு…

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம், திருவெறும்பூர் தொகுதிகளில் நேற்று முன்தினம் நடைபயணம் மேற்கொண்டார். நேற்று ( 08.11.2023 ) மாலை திருச்சி கிழக்கு மற்றும் மேற்கு தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபயணம் மேற்கொண்டார். பின்னர் இரவு 7-40 மணிக்கு காந்தி மார்க்கெட் பகுதியில் நடைபயணத்தை நிறைவு செய்து, அவர் பேசியதாவது: ராமேஸ்வரத்தில் துவங்கிய யாத்திரை, 103 தொகுதிகளை தொட்டு, எழுச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பாரதப் பிரதமர் மோடியை பொருத்தவரை, சாதாரண மக்கள் எதிர்பார்க்கும் பிரதமராக இருக்கிறார். 2024 தேர்தலில் மோடியை மீண்டும் பிரதமராக்குவார்கள்.
காங்கிரஸ் ஆட்சியில், இந்தியாவின் வளர்ச்சி வகிதம் வெறும் 2 சதவீதமாகத் தான் இருந்தது. பிரதமர் மோடி, கடந்த 9 ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சியில், 11வது இடத்தில் இருந்த இந்தியாவை 5வது இடத்துக்கு கொண்டு வந்திருக்கிறார். இது சாதாரண சாதனை இல்லை. 2027 ல் ஜப்பான், ஜெர்மனியை முந்திக்கொண்டு இந்தியா 3வது இடத்துக்கு வந்து விடும். 2047 ல் உலகின் முதன்மை நாடாக, இந்தியா வர வேண்டும் என்று பிரதமர் நினைக்கிறார். இந்தக் கனவு நனவாகும்.பா.ஜ.க ஆட்சிக்கு நேர் எதிராக தமிழகத்தில், தி.மு.க., ஆட்சி நடக்கிறது. இங்கிருக்கும் அரசியல்வாதிகள் குறுநில மன்னர்களாகி ஆட்சி நடத்துவதால், அதை பார்த்து மக்கள் சோர்ந்து போய் உள்ளனர்.

   

தமிழக வரலாற்றில், இது போன்ற மோசமான மகனுக்கும், மருமகனுக்குமான ஆட்சியை நாம் பார்த்ததில்லை. சாதாரண மனிதர்கள் ஆட்சிக்கு வரும் போது, ஏழை மனிதனின் கண்ணீரும் கஷ்டமும், பசிக் கொடுமையும் தெரியும். சாதாரண மனிதர்கள் ஆட்சிக்கு வராமல், முதல்வராக இருந்த கருணாநிதியின் மகன் ஸ்டாலின், அடுத்து முதல்வராகவும், ஸ்டாலின் மகன் உதயநிதி அமைச்சராகவும் இருந்தால், மக்களின் கண்ணீரும், பசியும் எப்படி தெரியும். ஒரு ஆண்டுக்கு மத்திய அரசு 2 லட்சம் கோடி ரூபாய் வீதம், 10 லட்சம் கோடி ரூபாய் யாரும் பசியோடு இருக்கக் கூடாது என்பதற்கான திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. வேறு எதை பற்றியும் பேசாமல், மோடி ஹிந்தியை திணிக்கிறார் என்று குற்றச்சாட்டு வைக்கின்றனர். பிரதமர் மோடி, உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு தமிழை எடுத்துச் சென்றுள்ளார். அதனால், தமிழை திணிக்கிறார் என்று தான், தி.மு.க.,வினர் குற்றச்சாட்டு வைக்க வேண்டும்.

புதிய பார்லிமெண்ட்டில், தமிழ் மீதுள்ள பற்றின் காரணமாக, நம்முடைய கலாச்சாரத்தின் சின்னமான செங்கோலை வைத்துள்ளார். அரசியலுக்காக, அவர் எதையும் செய்யவில்லை. புதிய கல்விக் கொள்கையில், தாய் மொழி தான் பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். பெரும்பிடுகு முத்தரையர் நீர் மேலாண்மைக்கும், தமிழ் மொழியை கல்வெட்டுக்களில் பொறிப்பதற்கும் பாடுபட்டவர். அவரை போன்ற இந்த மண்ணுக்கு சொந்தக்காரர்களை திரும்பவும் கொண்டு வந்து கண் முன்னால் நிறுத்த வேண்டும் என்பது எங்களின் ஆசை. வ.வே.சு. அய்யர் போன்ற மாமேதைகள் பிறந்த மண் திருச்சி. அவருக்கு இங்கு எங்கேயும் நினைவுச் சின்னம் இல்லை. மும்மொழி கொள்கை இருந்தால், தமிழ் மக்கள் முன்னேறி விடுவார்கள் என்று நினைத்த கி.ஆ.பெ. விஸ்வநாதம் அதை வலியுறுத்தினார். பி.ஆர்.தேவர் போன்றவர்களுக்கு சிலைகள் இல்லை. அவர்களை பற்றி பேச்சு இல்லை. 1967 க்கு பின், நான்கு தலைவர்கள் பெயரை மட்டுமே வைக்கின்றனர். அந்தந்த மண்ணில், அந்தந்த மண்ணின் மைந்தர்களை கவுரப்படுத்தி முதன்மைப்படுத்தி பெயர் வைக்க வேண்டும். திருச்சியில், இவர்கள் சிலைகளை, பெயர்களை வைத்து கவுரவப்படுத்த வேண்டும்.

திராவிட மாடல் ஆட்சியில், தமிழகத்தில் எங்கு பார்த்தாலும், ‘அசுத்தம்’ என்ற வார்த்தை தான் உள்ளது. திருச்சியிலும் அதே பிரச்சனை தான் உள்ளது. ராஜராஜசோழன் வெட்டிய உய்யக் கொண்டான் வாய்க்கால், கழிவுநீர் தொட்டியாக மாறி விட்டது. இது தான், திராவிட மாடல் ஆட்சி என்றும், வளர்ச்சி என்றும் கூறுகின்றனர். இன்னும் 20 ஆண்டுகளில் ஆறுகளை, வாய்க்காலை, குளத்தை குழந்தைகளுக்கு காட்ட முடியாது. பொய் வாக்குறுதி கொடுத்தும், இலவசங்களை கொடுத்தும் ஓட்டுக்களை வாங்கும் தி.மு.க., புதிய தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்று கவலைப்பட வில்லை.கோவில் வாசலில், கடவுளை நம்புபவன் முட்டாள் என்ற வாசகத்தை எழுதி வைத்துள்ளனர். அதை அகற்றுவோம். பா.ஜ., ஆட்சிக்கு வந்ததும், கோவில் முன், ஹிந்து தர்மத்தை காப்பவர்களின் சிலைகளை நிறுவுவோம். சிலைகளாக இருந்தாலும், வாசகமாக இருந்தாலும் பொது இடத்தில் தான் வைக்க வேண்டும்.
தமிழகத்தில், 2022ல் வெளியிட்ட சி.ஏ.ஜி அறிக்கையின்படி, அரசு பள்ளிகளில், 11 ஆயிரத்து 711 வகுப்பறைகள் குறைவாக உள்ளது. அதனால் மேற்கூரை இல்லாத வெட்டவெளியிலும், பள்ளியின் ஆய்வகத்திலும் குழந்தைகள் அமர்ந்து படிக்கின்றனர். 18 ஆயிரத்து 862 ஆசிரியர் காலியிடம் உள்ளது. மொத்த ஆசிரியர் பணியிடங்களில், 15.87 சாவீதம் ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. ஆனால், பகுதி நேர ஆசிரியர்கள், தகுதி தேர்வு எழுதிய ஆசிரியர்கள் பலவாறாக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். தமிழக அரசின் கொள்கைப்படி, ஒரு ஊரில், 5 கி.மி., தொலைவுக்குள் உயர்நிலை பள்ளியும், 8 கி.மி., தொலைவுக்குள் மேல்நிலைப்பள்ளியும் இருக்க வேண்டும். 2,133 இடங்களில் 5 கி.மி., தொலைவுக்குள் உயர்நிலை பள்ளி இல்லை. 1,926 இடங்களில் மேல்நிலைப் பள்ளி இல்லை. ஆய்வு செயத 108 பள்ளிகளில் 37 பள்ளிகளில் சுற்றுச் சுவர் இல்லை.
இதனால், அரசு பள்ளியில் பயிலும் அடுத்த கட்ட இளைஞர்கள், குழந்தைகள் தோற்றுக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு வாய்ப்பு வசதிகளை அரசு தரப்பில் செய்து கொடுக்கவில்லை.‘நேஷனல் அச்சீவ்மெண்ட் சர்வே’யின்படி. 10 வகுப்பில் 2 சதவீதம் மாணவர்கள் அறிவியல் பாடத்திலும், 8 சதவீதம் மாணவர்கள் கணிதத்திலும் வெற்றி பெற்றிருக்கின்றனர். 98 சதவீதம் அறிவியலிலும், 92 சதவீதம் கணிதத்திலும் மற்றவர்கள் தோல்வியடைந்துள்ளனர். அந்தக் குழந்தைகளிடம் நீட் விலக்கு பெறப் போவதாக கையெழுத்து வாங்குகின்றனர். மாணவர்களிடம் கற்றல் திறன் இல்லை. பள்ளிகளில் சுற்றுச் சுவர் இல்லை. பள்ளிகளில் ஆசிரியர் காலியிடம் இருக்கிறது.
திருச்சியில், ஜப்தி செய்யச் சென்ற மண்டல துணை தாசில்தார் பிரேம்குமாரை தாக்கிய தி.மு.க.,வினர் மீது போலீசார் பெயரளவுக்கு வழக்கு பதிந்து டிராமா செய்கின்றனர். ஆனால், தி.மு.க., ஆட்சியில் 3 முறை விலை உயர்வு ஏற்பட்டதால், காபி விலை உயர்த்தி இருப்பதற்காக பேனர் வைத்த பா.ஜ., பிரமுகரை கைது செய்துள்ளனர். பா.ஜ., பிரமுகர் மீது கை வைத்தவர்களை விடப்போவதில்லை.
திருச்சியில், ஆட்டோ நகர், நவீன வசதிகளுடன் புறநகர், எலிவேட்டேட் ஹைவே, பல்நோக்கு மருத்துவமனை, மெட்ரோ திட்டம், மலைக்கோட்டைக்கு ரோப்கார் என்பன போன்ற வடைகளை (வாக்குறுதி) சுட்டுவிட்டு, 30 மாதங்களாக ஸ்டாலின் ஆட்சியில் அமர்ந்திருக்கிறார். அவரோடு, தி.மு.க.,வினரும் வடை தான் சுட்டுக் கொண்டிருக்கின்றனர். திருச்சியை அடுத்த கட்டத்துக்கு, பிரதமர் மோடி எடுத்துச் செல்வார். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில், கட்சி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

பின்னா், ஈ.வெ.ரா., சிலையை அகற்றுவதாக சொன்னீர்களா? நீங்கள் சொன்னது தவறாக புரிந்து கொள்ளப்பட்டதா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, இன்றைய பேச்சில், பா.ஜ.க. கட்சியின் ஆக்‌ஷன் பிளான் பற்றி தெளிவாக பேசியுள்ளேன். கோவிலுக்கு வெளியே யார்? இருக்க வேண்டும். மற்ற தலைவர்கள் எங்கு இருக்க வேண்டும், என்ற பா.ஜ.க.வின் நிலைப்பாடு பற்றி பொதுக் கூட்டத்தில் தெரிவித்து விட்டேன்.வரும் 2026ல், மக்களுக்கு ஒரு சாய்ஸ் கொடுத்துள்ளோம். மக்கள் அந்த சாய்ஸுக்கு ஓட்டு போட உள்ளனர். பயந்து பேசிக் கொண்டிருக்கும் தி.மு.க.வின் நாட்களை மக்கள் எண்ண ஆரம்பித்து விட்டனர்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்