திருச்சி உய்யக்கொண்டான்திருமலை 5 -வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் ( 67).வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவர் கடந்த 30-ந் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றிருந்தார். பின்னர் நேற்று வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 18 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவமனை குற்ற பிரிவு போலீசில் சந்திரசேகரன் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினார். மேலும் கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவான ரேகைகளை பதிவு செய்தனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து இதில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.
Comments are closed.