Rock Fort Times
Online News

மத்திய இளைஞர் விவகாரத்துறை இயக்குனராக டிஐஜி வந்திதா பாண்டே நியமனம்…!

இந்திய காவல் துறையில் கண்டிப்புக்கு பெயர் பெற்ற ஐபிஎஸ் அதிகாரி வந்திதா பாண்டே. புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பியாக பணியாற்றிய இவர், கடந்த சில வாரங்களுக்கு முன்பு திண்டுக்கல் சரக டிஐஜியாக பதவி உயர்வு பெற்றார். இவரது கணவர் வருண் குமார் தற்போதைய திருச்சி மத்திய மண்டல காவல் சரக டிஐஜியாக உள்ளார்.உத்தரப்பிரதேச மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட வந்திதா பாண்டே, கடந்த 2010ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழ்நாடு கேடர் அதிகாரியாக இந்திய காவல் பணியில் பணியில் சேர்ந்தார். காக்கிச்சட்டை அணிந்த ஆரம்ப நாட்கள் முதல் கண்டிப்புக்கும் கறார் நடவடிக்கைக்கும் பெயர் பெற்றவர் வந்திதா பாண்டே.சிவகங்கை மாவட்டத்தில் அதிகாரியாக பணியாற்றிய சமயத்தில் போலீஸ் உயர் அதிகாரிகள் உட்பட பலரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சிறுமி வழக்கை கையில் எடுத்து மிக நேர்த்தியாக முடித்தார். பிறகு கரூருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அப்போதைய தேர்தல் சமயத்தில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக புகார் எழுந்தது. கரூர் எஸ்பியாக இருந்த வந்திதா பாண்டே பிரபல பைனான்சியர் அன்புநாதன் மீது நடவடிக்கை எடுத்தார். இது தமிழக அளவில் பரபரப்பாக பேசப்பட்டது.இது போன்ற பல துணிச்சலான நடவடிக்கைகளை எடுத்து சக அதிகாரிகள் மத்தியில் பெயரெடுத்தவர். இந்நிலையில், மத்திய அரசு பணிக்கு மாறுதல் கேட்டு விண்ணப்பித்திருந்த திண்டுக்கல் சரக டிஐஜி வந்திதா பாண்டேவை மத்திய இளைஞர் விவகாரத்துறை இயக்குனராக நியமனம் செய்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்