கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் கடந்த மாதம் (செப்டம்பர்) 27-ந் தேதி பிரசாரம் செய்தபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த கடந்த 13-ந்தேதி உத்தரவிட்டது. இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி ஐ.பி.எஸ். அதிகாரி பிரவீன்குமார் தலைமையில், சி.பி.ஐ. ஏ.டி.எஸ்.பி. முகேஷ்குமார், டி.எஸ்.பி. ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய சி.பி.ஐ. அதிகாரிகள் குழுவினர் இன்று(அக்.17) கரூர் வந்துள்ளனர். இதைத் தொடர்ந்து, கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக இதுவரை நடத்திய விசாரணை தொடர்பான ஆவணங்களை சி.பி.ஐ. அதிகாரிகளிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் ஒப்படைத்தனர். ஆவணங்களை பெற்றுக்கொண்ட சி.பி.ஐ. அதிகாரிகள், கூட்ட நெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து விசாரணையை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Comments are closed.