திருச்சி மாவட்டத்தில் வருகிற 2025-ம் ஆண்டிற்கான ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்துவதற்காக விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.பிரதீப்குமார் அறிவுறுத்தியுள்ளார் . இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது., கடைசி நேர அவசரத்தை தவிர்க்கும் பொருட்டும், அரசிதழ்களில் அறிவிப்புகள் வெளியிடும் பொருட்டும் எதிர்வரும் 2025-ஆம் ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான விண்ணப்பங்களை போட்டி நடத்தப்படும் 30 தினங்களுக்கு முன்னதாக மாவட்ட நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். ஜல்லிக்கட்டு/ வடமாடு போட்டிகளை நடத்தும் விழா குழுவினர் கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை அரசாணை எண்:7ல் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றி போட்டியினை நடத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அரசிடம் முன் அனுமதி பெற்று மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வேண்டும். அரசாணை வெளியிடப்பட்டு கடந்த ஆண்டுகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்ற கிராமங்களில் மட்டுமே தற்போது ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட வேண்டும்.அரசிடமிருந்து முன் அனுமதி பெறாமல் ஜல்லிக்கட்டு போட்டியினை நடத்துவோர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேற்குறித்த அறிவுரைகளை பின்பற்றி போட்டி நடத்த உள்ளவர்கள் தங்கள் விண்ணப்பங்களை அளித்திட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.