திருச்சி மாவட்டத்தின் மைய பகுதியில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ் சாலையோரம் சஞ்சீவி நகர் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் உள்ள மேம்பாலத்தில் லேசான விரிசல் ஏற்பட்டது கண்டறியப்பட்டது. இதனை தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்து பாலத்தில் மேலும் விரிசல் ஏற்படுவதற்கு முன்பாகவே போக்குவரத்தினை தடை செய்யாமல் முன்னெச்சரிக்கையாக சரி செய்து விட வேண்டும் என ஆலோசனை செய்தனர். அதன்படி, சென்னையை சேர்ந்த ஹெச்.பி.ஆர் நிறுவன ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஊழியர்கள் 20க்கும் மேற்பட்டோர் பாலத்தில் ஏற்பட்ட விரிசலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக கடந்த ஜனவரி மாதம் பொன்மலை ரயில்வே மேம்பால அடிப்பகுதியில் கற்கள் சரிந்ததால் மூன்று மாத காலம் போக்குவரத்து நிறுத்தப்பட்டு சரி செய்த பின்னரே போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. அதேபோன்று இதே மேம்பாலத்தில் செந்தண்ணீர்புரம் அணுகு சாலை அருகே உள்ள திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் 7க்கும் மேற்பட்ட இடங்களில் விரிசல் ஏற்பட்டது. அதனை சரி செய்யும் பணியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இந்தநிலையில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை சஞ்சீவி நகர் – பால்பண்ணை இடையே உள்ள மேம்பாலத்தின் பக்கவாட்டுப் பகுதியில் விரிசலுக்கான அறிகுறி இருப்பதாலும், அதேபோன்று சாலையில் லேசான பள்ளம் இருப்பதாலும் அதனை சீரமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தினமும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருவதால் வாகன போக்குவரத்தை நிறுத்தாமல் 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சாலையின் பக்கவாட்டிலும், தார் சாலையிலும் ஆங்காங்கே 50க்கு மேற்பட்ட இடங்களில் துளையிட்டு சிமெண்ட் பாலை ஊற்றி சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Comments are closed.