ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நடிகர் ஆர்.கே. சுரேஷ் மீதான லுக் அவுட் நோட்டீஸ்சை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அமைந்தகரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட ஆருத்ரா கோல்டு நிறுவனம், அதிக வட்டி தருவதாகக் கூறி லட்சக் கணக்கான முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.2,438 கோடி வசூலித்து மோசடி செய்ததாக நடிகர் ஆர்.கே.சுரேஷ், பாஜக நிர்வாகி ஹரீஷ் உட்பட பலர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்நிறுவனத்துடன் தொடர்புடைய 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் பாஸ்கர், மோகன் பாபு, செந்தில் குமார், நாகராஜன், பேச்சி முத்துராஜா, நடிகர் ரூஸோ உள்ளிட்ட பலரை கைது செய்துள்ளனர்.
ஆருத்ரா மோசடியில் சினிமா நடிகர் மற்றும் பாஜக ஓபிசி பிரிவு துணைத் தலைவரான ஆர்.கே. சுரேஷுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது. இதையடுத்து, விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி ஆர்.கே. சுரேஷுக்கு பொருளாதார குற்றப்பிரிவினர் சம்மன் அனுப்பினர். இருப்பினும் அவர் ஆஜராகவில்லை. ஆர்.கே. சுரேஷ் துபாய் நாட்டுக்குத் தப்பிச் சென்றதாகக் கூறப்பட்ட நிலையில், விசாரணைக்கு ஆஜராகவில்லை என்று அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இதற்கிடையே, சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பிறப்பித்த லுக் அவுட் நோட்டீஸ் ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்.கே. சுரேஷ் மனுத் தாக்கல் செய்தார்.
பின்னர் துபாயிலிருந்து சென்னை திரும்பிய ஆர்.கே.சுரேஷ், சென்னை பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரி முன்பு விசாரணைக்கு ஆஜராகி வாக்குமூலம் அளித்திருந்தார். இந்நிலையில் லுக் அவுட் நோட்டீசை எதிர்த்த வழக்கு நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் ஆர்.கே.சுரேஷ் அளித்த வாக்குமூலம், ஆவணங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து வருவதாகவும், விசாரணைக்குத் தேவைப்படும் பட்சத்தில் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஆர்.கே.சுரேஷுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீசை ரத்து செய்த நீதிபதி, மீண்டும் விசாரணை தேவைப்பட்டால் புதிதாகச் சம்மன் அனுப்பும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.