திருச்சியில் சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி பயன்படுத்திய நாட்டு துப்பாக்கி, பெட்ரோல் குண்டுகள் பறிமுதல் …
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சியை சேர்ந்த முத்துக்குமார்- சரஸ்வதி தம்பதியரின் மகன் ஜெகன்(எ) கொம்பன் ஜெகன்(30). ரவுடியான இவர் மீது கொலை வழக்கு, ஆள் கடத்தல், கொலை முயற்சி, கூலிப்படையாக செயல்பட்டது, முக்கிய நபர்களிடம் மாமுல் வசூலிப்பது , அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. திருவெறும்பூர் காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளியாக ஜெகன் உள்ளாா். எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் பட்டபடிப்பு முடித்துள்ள இவர், படிக்கும் போதே தனது 17வது வயதில் அடிதடி வழக்கு ஒன்றில் சிக்கி ரவுடி வாழ்க்கைக்கு பிள்ளையார் சுழி போட்டார். 2010 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை திருச்சி, பெரம்பலூர், தஞ்சை, நாகை, மதுரை, திருவண்ணாமலை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் 5 கொலை வழக்கு, 5 கொலை முயற்சி வழக்கு என 60க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. 8 முறை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஏறத்தாழ 8 ஆண்டுகள் சிறையிலேயே தனது வாழ்க்கையை கழித்துள்ளாா். ஜெகனுக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். இதில் இரண்டாவது மனைவி வழக்கறிஞராக உள்ளார். கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஜெகன் பிறந்தநாள் விழா கொண்டாடுவதற்காக இவரது வீட்டில் கூட்டாளிகளுக்கு கறி விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் இவரது கூட்டாளிகள் 9 பேர் பட்டா கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்து கலந்து கொண்ட போது அவர்கள் அனைவரையும் திருவெறும்பூர் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் இன்று ( 22.11.2023 ) திருச்சி சிறுகனூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சனமங்கலம் காட்டுப் பகுதியில் பதுங்கி இருந்த ஜெகனை போலீசார் பிடிக்க முயன்ற பொழுது ஜெகன் அரிவாளால் தாக்கியதில் எஸ்ஐ வினோத் கையில் காயம் ஏற்பட்டது.
எனவே போலீசார் தங்களை தற்காத்துக் கொள்ள இரண்டு ரவுண்டுகள் சுட்டதில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே ஜெகன் உயிரிழந்தார். சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி ஜெகன் உடலில் இரண்டு குண்டுகள் பாய்ந்துள்ளது. வலது இதயத்தில் ஒரு குண்டும் இடது மார்புக்கு கீழ் ஒரு குண்டும் பாய்ந்துள்ளது. இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு திருச்சி சரக டிஐஜி பகலவன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். அப்போது ஜெகன் பயன்பாட்டுக்காக வைத்திருந்த நாட்டு துப்பாக்கி மற்றும் பெட்ரோல் குண்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் தடயவியல் நிபுணர்களும் தடயங்களை சேகரித்தனர்.இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.