Rock Fort Times
Online News

கள்ளக்குறிச்சியில் நொடிக்கு நொடி அதிகரிக்கும் கள்ளச்சாராய மரணங்கள் ! தீவிர சிகிச்சை பெறும் 168 பேரின் கதி என்ன?

கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 49 ஆக அதிகரித்துள்ளது. விழுப்புரம், சேலம், மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் இன்னும் 168 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மேலும் 21 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கருணாபுரத்தில், கடந்த 18-ம் தேதி சட்ட விரோதமாக விற்கப்பட்ட கள்ளச் சாராயத்தை வாங்கி சிலர் குடித்துள்ளனர். இதில், கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு, 19-ம் தேதி இரவு 11 மணி நிலவரப்படி 17 பேர் உயிரிழந்தனர். நேற்று மாலை நிலவரப்படி, உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்தது. இதில் 3 பேர் பெண்கள். உயிரிழந்தவர்களில் 31 பேரின் உடல்கள், நேற்று குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

இதற்கிடையே, அதே பகுதியில் மேலும் பலரது உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அவர்களும் அடுத்தடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அந்த வகையில், கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைகள் மற்றும் புதுச்சேரி ஜிப்மரில் 168 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 21 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள சிலர், திடீரென கண் பார்வை பாதிக்கப்பட்டிருப்பதாகவும், கடும் வயிற்று வலி இருப்பதாகவும் கூறியதால், பரபரப்பான சூழல் காணப்பட்டது. அவர்களுக்கு மருத்துவர்கள் உடனுக்குடன் முதலுதவி சிகிச்சை அளித்து வருகின்றனர். நேற்றும் சிலர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்தனர். இந்நிலையில், இன்று (ஜூன் 21) காலை நிலவரப்படி, உயிரிழந்தோர் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது. இதில், 21 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. கள்ளச் சாராயம் குடித்தவர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலையில், கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜ், கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் சரணடைந்தார். சின்னத்துரை என்பவர், மெத்தனால் கலந்த சாராயத்தை தன்னிடம் விற்றதாக போலீஸாரிடம் அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, கோவிந்தராஜின் மனைவி விஜயா, சகோதரர் தாமோதரனிடமும் சிபிசிஐடி போலீஸார் விசாரித்தனர். அவரிடம் கள்ளச் சாராயம் வாங்கிச் சென்று விற்றது தொடர்பாக 23 பேரை விசாரித்து வருகின்றனர். சின்னத் துரையையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்