Rock Fort Times
Online News

பாமக பொதுக்குழு கூட்டத்தில் மோதல் விவகாரம்: ராமதாசுடன் அன்புமணி சந்திப்பு…!

பா.ம.க.வின் பொதுக் குழு கூட்டம் புதுச்சேரியில் நேற்று(28-12-2024) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், கட்சியின் தலைவர் அன்புமணி, கவுரவ தலைவர் ஜி.கே.மணி உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். அப்போது புதுச்சேரி இளைஞரணி தலைவராக முகுந்தன் என்பவரை நியமிப்பதாக நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார். அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே குறுக்கிட்ட அன்புமணி, கட்சியில் சேர்ந்து
4 மாதங்கள்கூட ஆகாத ஒருவர் எப்படி இளைஞரணி தலைவராக முடியும்? கட்சியில் உழைக்கக்கூடியவர்கள் பலரும் உள்ளனர் என்று தெரிவித்தார். ஆனால், அதனை பொருட்படுத்தாத ராமதாஸ் கட்சியை உருவாக்கியது நான், கட்சியில் உள்ள பொறுப்பாளர்களை நான்தான் நியமிப்பேன். இதில் உடன்படாதவர்கள் யாராக இருந்தாலும் கட்சியில் இருந்து வெளியேறலாம் என்று தெரிவித்தார். இதில், ஆத்திரம் அடைந்த அன்புமணி, எனக்கு சென்னை பனையூரில் அலுவலகம் உள்ளது. என்னை சந்திக்க விரும்புபவர்கள் யாராக இருந்தாலும், அங்கு வந்து உங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என்று கூறி செல்போன் எண்ணையும் அறிவித்துவிட்டு கூட்டத்தை விட்டு வெளியேறினார். பா.ம.க. இளைஞரணி தலைவர் நியமனம் தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே பொதுக்குழு கூட்டத்தில் ஏற்பட்ட வார்த்தை மோதல் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில் தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாசை பாமக தலைவர் அன்புமணி இன்று(29-12-2024) சந்தித்து பேசி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், அவர்களுக்கு இடையே சமரசம் ஏற்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்