டி.டி.வி.தினகரன் குறித்து சர்ச்சை பேச்சு: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை தாக்க முயற்சி – அதிமுக தொண்டர்களுக்கு சரமாரி அடி…!
மதுரை உசிலம்பட்டி அருகே அத்திப்பட்டியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்து ஆர்.பி.உதயகுமார் திருமங்கலம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது காரை வழிமறித்த அமமுக நிர்வாகிகள் சிலர் டி.டி.வி.தினகரன் குறித்து அவதூறு பேசியதாகக் கூறி அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதோடு அவரை தாக்க முயன்றனர். அப்போது ஆர்.பி.உதயகுமாருடன் வந்தவர்களை சரமாரியாக அடித்ததாக கூறப்படுகிறது. இதில் அதிமுக நிர்வாகி தினேஷ்குமார் படுகாயமடைந்த நிலையில் விஷ்ணு, அபினேஷ் உள்ளிட்ட சிலரும் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக அவர்கள் மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த மோதல் அதிமுக மற்றும் அ.ம.மு.க.கட்சிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Comments are closed.