இன்ஸ்டாகிராம் மூலம் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு- காதல் மனைவியை தனியாக வரவழைத்து தீர்த்துக் கட்டிய கணவன் கைது, பரபரப்பு வாக்குமூலம்…!
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 36). இவரும், இவரது உறவினரான திருச்சி மாவட்டம், சிறுகனூரை சேர்ந்த இலக்கியா (31) என்பவரும் காதலித்து, கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் வெங்கடேசுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு திருப்பூர் பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதையறிந்த இலக்கியா, வெங்கடேசிடம் கேட்டதால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதனால், கணவரிடம் கோபித்துக் கொண்டு சிறுகனூரில் உள்ள தனது தாய் வீட்டில் கடந்த 6 மாதமாக இலக்கியா வசித்து வந்தார். இந்நிலையில், தாயாரிடம் கடைக்குச் சென்று வருவதாக கூறிவிட்டு வெளியே சென்ற இலக்கியா பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் சிறுகனூர் போலீஸ் நிலையத்தில் அவரது பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இலக்கியாவை தேடி வந்த நிலையில் இலக்கியாவின் பெற்றோர் வசித்து வரும் வீட்டின் அருகே உள்ள வாய்க்காலில் இலக்கியா காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இலக்கியாவின் உடலில் காயங்கள் இருந்ததால் அவரது கணவர் வெங்கடேசை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது போலீசாரிடம் வெங்கடேஷ் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். எனக்கு இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. இதையறிந்த எனது மனைவி இலக்கியா என்னிடம் தகராறு செய்துவிட்டு அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இருப்பினும், இலக்கியா அடிக்கடி செல்போன் மூலம் என்னிடம் தொடர்பில் இருந்தார். இதைத்தொடர்ந்து பொங்கல் பண்டிகை அன்று எனது மனைவியை பார்க்க சிறுகனூர் சென்றேன். அப்போது என் மனைவியிடம் நாம் மீண்டும் ஒன்று சேர்ந்து வாழலாம் என கூறி அழைத்ததற்கு அவள் வரவில்லை. மேலும் அவரது பெற்றோரும் சம்மதிக்கவில்லை. இதனால் கடும் ஆத்திரத்தில் இருந்த நான் இலக்கியாவை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன். சம்பவ தினத்தன்று எனது மனைவி என்னிடம் செல்போனில் பேசியபோது நான் உன் வீட்டிற்கு வரமாட்டேன். தனிமையில் சந்திப்போம் என்று கூறினேன். இதைத்தொடர்ந்து தனியாக வந்த எனது மனைவியிடம் சிறுகனூர் அருகே உள்ள வாய்க்கால் அருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தேன். பின்னர் வீட்டிற்கு நடந்து சென்ற என் மனைவியை துணியால் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தப்பிச் சென்றுவிட்டேன் என போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதனைதொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து லால்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிபதி உத்தரவின்படி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்
Comments are closed.