தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு, பணி நிரந்தரம் மற்றும் மாத ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடந்தது. திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக சுமைதூக்குவோர் மாநில பாதுகாப்பு சங்கம் சார்பில் நடந்த மாநில அளவிலான கவன ஈர்ப்பு உண்ணாவிரதப் போராட்டத்திற்கு மாநில தலைவர் வீரராகவன் தலைமைவகித்தார். தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 1000-க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். ஏனைய அரசின் சுமை தூக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை போன்று 28 ஆயிரம் ரூபாய் குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும், 8 மணி நேர வேலை உறுதி செய்ய வேண்டும், நிரந்தர தொழிலாளர்களை நீக்கி ஒப்பந்த தொழிலாளர்களை பணியில் அமர்த்தும் அரசின் நடவடிக்கையை கைவிட வேண்டும், அரசு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் 24ம் தேதி முதல் தமிழக முழுவதும் உள்ள நுகர்பொருள் வாணிப கழக அலுவலகங்களில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அரசுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.