Rock Fort Times
Online News

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்:- பிரதமர் மோடியை நேரில் சந்திக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு…!

மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகள் மறு சீரமைப்பு செய்யப்பட உள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் 8 தொகுதிகள் வரை குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதேபோல தென்மாநிலங்களிலும் நாடாளுமன்ற தொகுதிகள் குறையும் என்று சொல்லப்படுகிறது. அதேநேரம் வட மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் அண்மையில் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக பிரதமரை சந்திக்க முடிவு எடுக்கப்பட்டது. இந்தநிலையில் கடந்த மார்ச் மாதம் 27ஆம் தேதி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஒரு கடிதம் எழுதினார். அதில், தொகுதி மறு வரையறை தொடர்பகாக சமீபத்திய விவாதங்களில் இருந்து வெளிப்பட்ட எல்லை நிர்ணயம் தொடர்பான கருத்துகளை முன்வைக்க, பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சந்திக்க அனுமதி தருமாறு கேட்டுக் கொள்கிறேன். கடந்த மார்ச் 22, 2025 அன்று, ‘நியாயமான எல்லை நிர்ணயம்’ தொடர்பான முதல் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜேஏசி) கூட்டத்தை சென்னையில் நடைபெற்றது . இது இந்தியா முழுவதிலும் உள்ள பல்வேறு அரசியல் சித்தாந்தங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் முதலமைச்சர்கள், துணை முதலமைச்சர் மற்றும் முக்கிய தலைவர்களை ஒன்றிணைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டமாக இருந்தது. இந்த கூட்டங்களில் நடைபெற்ற விவாதங்களில் இருந்து வெளிப்படும் குரல்கள் அரசியல் எல்லைகளைக் கடந்து, நமது நாடாளுமன்ற ஜனநாயகத்தில் நியாயமான பிரதிநிதித்துவம் கோரும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த குடிமக்களின் கவலைகளை உள்ளடக்கியதாகும்.

எனவே இந்த விவகாரம் நமது மாநிலங்களுக்கும், குடிமக்களுக்கும் கணிசமான முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால், கூட்டு நடவடிக்கைக் குழுவின் சார்பாக முறைப்படி எடுக்கப்பட்ட தீர்மானங்களை சமர்ப்பிக்க தங்களைச் சந்திக்க அனுமதி தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் நேர்மறையான பதிலை விரைவில் எதிர்பார்க்கிறேன் என குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் இந்த கடிதத்தை தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்த முதலமைச்சர் ஸ்டாலின், மீண்டும் பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி கேட்டுள்ளார். அந்த பதிவில், எல்லை நிர்ணயம் தொடர்பான மாநிலங்களின் கவலைகள் குறித்து எங்கள் தீர்மானங்களை வழங்க, பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களுடன் சேர்ந்து, உங்களை சந்திக்க நேரம் கோரியுள்ளேன். நமது மக்களுக்கு இந்த முக்கியமான பிரச்சினையில் எங்கள் ஒன்றுபட்ட நிலைப்பாட்டை தெரிவிக்க நாங்கள் அவசரமாக உங்கள் நேரத்தைக் கோருகிறோம். உங்கள் விரைவான பதிலுக்காகக் காத்திருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்