Rock Fort Times
Online News

கோவை அருகே தண்டவாளத்தில் கல், இரும்பு வைத்து ரயிலை கவிழ்க்க சதி?- வடமாநில தொழிலாளர்கள் 3 பேர் கைது…

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் ராக்கேஸ் (21), ஜூஹல் (19), பப்லு (31). இவர்கள் மூவரும் மதுக்கரை சாலையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தனர். சம்பவத்தன்று இவர்கள் மூவரும் சிட்கோ அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அப்போது பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் அவர்களை பிடித்து அபராதம் விதித்தனர். அபராதம் விதித்ததில் ஆத்திரமடைந்த மூவரும் அன்று இரவு 10 மணியளவில் மீண்டும் சிட்கோ அருகே உள்ள தண்டவாளத்திற்கு வந்து அங்கிருந்த மைல்கல், இரும்பு ஆகியவற்றை எடுத்து ரயில்வே தண்டவாளத்தில் வைத்து விட்டு சென்று விட்டனர்.
ஆனால், ரயில் அருகே உள்ள மற்றொரு தண்டவாளத்தில் சென்றது. அப்போது அந்த ரயிலை இயக்கிய லோகோ பைலட் ரயில்வே தண்டவாளத்தில் கற்கள் மற்றும் இரும்பு இருப்பதை கவனித்து போத்தனூர் ரயில்வே துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து விரைந்து வந்த தண்டவாள பராமரிப்பு குழுவினர் தண்டவாளத்தில் இருந்த கற்கள், இரும்பு துண்டுகளை அப்புறப்படுத்தினர். இதன் காரணமாக அவ்வழியாக வந்த டி கார்டன் விரைவு ரயில் விபத்திலிருந்து தப்பியது. ஆனால், அதே தண்டவாளத்தின் மற்றொரு இடத்தில் வைக்கப்பட்டிருந்த கற்கள் மீது மங்களூர் – சென்னை விரைவு ரயில் ஏறிச் சென்றது. இதுகுறித்து அந்த ரயிலின் லோகோ பைலட் கூறிய தகவலின் அடிப்படையில் உடனடியாக ரயில்வே தண்டவாள பாதுகாப்பு குழுவினர் மற்றும் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த கற்களை அகற்றினர். அப்போது அங்கிருந்து 3 பேர் வேகமாக தப்பி ஓடினர். அவர்களை ரயில்வே போலீசார் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மூவரும் ரயில்வே பாதுகாப்பு படையினர் அபராதம் விதித்த ஆத்திரத்தில் ரயிலை கவிழ்க்க திட்டமிட்டது தெரியவந்தது. இதையடுத்து மூவரையும் கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்