ஆட்சியில் பங்கு, முரண்டுபிடிக்கும் காங்கிரஸ்: ராகுல் காந்தியை இன்று (ஜன. 28) சந்திக்கிறார் கனிமொழி எம்.பி. !
தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் 25 தொகுதிகளில் போட்டியிட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சி (6), ம.தி.மு.க. (6), இந்திய கம்யூனிஸ்டு கட்சி (6), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி (6), கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (3), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (3), மனிதநேய மக்கள் கட்சி (2), தமிழக வாழ்வுரிமை கட்சி (1) உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன. கூட்டணிக்கு தலைமை வகித்த தி.மு.க. 177 தொகுதிகளில் போட்டியிட்டது. அதில், ம.தி.மு.க., கொ.ம.க., ம.ம.க., தமிழக வாழ்வுரிமை கட்சி போன்றவை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதும் அடங்கும். கடந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகள் இந்த முறையும் இடம் பெற்றுள்ளது. கூடுதலாக, நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யமும் கைகோர்த்துள்ளது. இந்தசூழலில், தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் எல்லாம், இந்த முறை கூடுதல் தொகுதிகளை கேட்டுப்பெறுவோம் என்று கூறி வருகின்றன. காங்கிரஸ் கட்சியோ ஒரு படி மேலே போய் ஆட்சியில் பங்கு வேண்டும் என கேட்டு வருகிறது. விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தங்களோடு கூட்டணி வைப்பவர்களுக்கு ஆட்சியில் பங்கு தருவதாக தெரிவித்துள்ளது. ஆனால், ஆட்சியில் பங்கு தர இயலாது என்று திமுக தெரிவித்து வருகிறது. இதனால் காங்கிரஸ் கட்சி இந்த முறை தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்கும் என்று சொல்லப்பட்டு வருகிறது. இவ்வாறான சூழ்நிலையில் இன்று (28-01-2026) டெல்லி செல்லும் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி,, ராகுல் காந்தியை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. அப்போது தமிழகத்தில் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து அவர்கள் பேச உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments are closed.