தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ளதால் அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியிருக்கிறது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், தமிழ் மாநில பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் தங்களது பிரச்சாரங்களை தொடங்கி விட்டனர். திமுகவும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இது ஒரு புறம் இருக்க தமிழகத்தில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையும் தொடங்கி இருக்கிறது. கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜயை தொடர்பு கொண்டு ராகுல்காந்தி எம்.பி.பேசினார். எடப்பாடி பழனிசாமியும், பாரதிய ஜனதாவும், விஜய்க்கு ஒருசேர ‘வாய்ஸ்’ கொடுத்தன. இதனால், விஜய் எந்த பக்கம் கூட்டணி சேருவார் என்ற எதிர்பார்ப்பு நிலவும் சூழ்நிலையில், திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழுவை அமைத்து அதிரடித்துள்ளது காங்கிரஸ் கட்சி. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார் ஜூன கார்கே ஒப்புதலுடன், அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்கள் சூரஜ் எம்.என். ஹெக்டே, நிவேதித் ஆல்வா, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜேஷ் குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் விரைவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக நிர்வாகிகளை சந்தித்து பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Comments are closed.