திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலை மணிகண்டம் அருகே அம்பேத்கர் நகர் வளைவு பகுதி உள்ளது. இந்த வளைவு பகுதி வழியாகத்தான் மதுரையில் இருந்து திருச்சி வரும் வாகனங்களும், திருச்சியில் இருந்து மதுரை செல்லும் வாகனங்களும், திண்டுக்கல் பகுதிக்கு செல்லக்கூடிய வாகனங்களும் கட் ரோட்டில் திரும்பி செல்வது வழக்கம். இந்தபகுதியில் அதிகளவு வாகனங்கள் செல்வதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த இடத்தில் திருச்சியை அடுத்த நாகமங்கலம் அருகே உள்ள ஹவுசிங் யூனிட் காலனியை சேர்ந்த சங்கர் என்பவரின் மகனும், கல்லூரி மாணவருமான சிவா (வயது 22) என்பவர் கல்லூரி செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒருவர் மோட்டார் சைக்கிளில் சாலையை கடக்க முயன்றதாக கூறப்படுகிறது. அந்த மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருக்க, சிவா திடீரென பிரேக் பிடித்துள்ளார்.
அப்போது சிவா ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் அங்குள்ள சென்டர் மீடியனில் மோதி சுமார் 50 அடி தூரம் தூக்கி வீசப்பட்டு எதிரே காய்கறி ஏற்றி வந்த லோடு ஆட்டோவின் கண்ணாடியை உடைத்துக் கொண்டு, சிவா உள்ளே விழுந்தார். இந்த விபத்தில் சிவா தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மணிகண்டம் போலீசார் விரைந்து வந்து தீயணைப்பு துறை உதவியுடன் சரக்கு ஆட்டோவில் சிக்கி கிடந்த மாணவன் சிவாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து மணிகண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த விபத்தில் லோடு ஆட்டோ டிரைவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் சுக்கு நூறாக நொறுங்கியது. கூலி வேலை செய்யும் பெற்றோர் தனது மகனுக்கு புதிதாக மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுத்து ஒன்றரை மாதம் தான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. விபத்தில் கல்லூரி மாணவர் பலியான சம்பவம் சினிமாவை மிஞ்சும் வகையில் இருந்தது.


Comments are closed, but trackbacks and pingbacks are open.