Rock Fort Times
Online News

கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்: திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என அரசியல் கட்சித் தலைவர்கள் குற்றச்சாட்டு…!

கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். கோவை விமான நிலையம் அருகே கல்லூரி மாணவி ஒருவர், 3 பேர் கொண்ட கும்பலால் கடத்திச் செல்லப்பட்டு, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். தமிழகம் முழுவதும் பேரதிரிச்சியை ஏற்படுத்தி உள்ள இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் காவல்துறை என்று ஒன்று உள்ளதா? என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்துள்ளது. பெண்கள் பாதுகாப்பை குழிதோண்டி புதைத்துவிட்ட திமுக அரசுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

அன்புமணி: திமுக ஆட்சியில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை என்பதையே இது காட்டுகிறது. தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. தமிழகத்தில் 2024ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை 6975 ஆக அதிகரித்திருக்கிறது. 2023ம் ஆண்டு இதே சட்டத்தின்கீழ் பதிவான 4581 வழக்குகளுடன் ஒப்பிடும்போது 52.30% அதிகம் ஆகும். தமிழகம் முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் விற்பனை கட்டுக்கடங்காத அளவுக்கு பெருகியிருப்பது தான் இத்தகைய குற்றங்கள் அதிகரிப்பதற்கு காரணம் ஆகும்
என்று தெரிவித்துள்ளார்.

தமிழிசை சௌந்தர்ராஜன்: தமிழகத்தை தலைகுனிய விடமாட்டோம் என்று விளம்பரத்திற்கு சொல்லிக் கொண்டிருக்கும் ஸ்டாலின் அரசு இன்று தமிழகத்தை தலைகுனிய வைத்திருக்கிறது. ஆட்சியாளர்கள் ஒவ்வொருவரும் வெட்கப்பட வேண்டிய சம்பவம் கோவையில் கொடூரமாக நடந்தேறி இருக்கிறது.
திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்பது மறுபடியும் மனக்கலக்கத்தோடு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை: தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், சமூக விரோதிகளுக்கு சட்டத்தின் மீதோ, காவல்துறையின் மீதோ சிறிதும் பயமில்லை என்பதையே, பெண்களுக்கெதிரான இது போன்ற தொடர் குற்றச் செயல்கள் காட்டுகின்றன. திமுக அமைச்சர்ககள் முதல், காவல்துறையினர் வரை, பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் போக்கையே மேற்கொள்கின்றனர். இப்படி ஒரு கையாலாகாத நிலையில் காவல்துறையை வைத்திருக்கும் காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்