கோவையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான கல்லூரி மாணவி: குற்றவாளிகளை பிடிக்க 7 தனிப்படைகள் அமைப்பு…!
கோவை சித்ரா பகுதியில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தின் பின்புறம் ஆட்கள் நடமாட்டம் அவ்வளவாக இருக்காது என்றும், சில சமூக விரோத செயல்கள் நடக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்றிரவு (நவ.2) சுமார் 11 மணியளவில் விமான நிலையத்துக்கு பின்புறம் அமைந்துள்ள பிருந்தாவன் நகர் பகுதியில் ஒரு இளம்பெண் தனது ஆண் நண்பருடன் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு ஒரே பைக்கில் வந்த 3 மர்ம நபர்கள் அந்த இளம்பெண் மற்றும் அவருடைய ஆண் நண்பரிடம் தகராறு செய்துள்ளனர். ஒரு கட்டத்தில் தகராறு கைகலப்பாக மாற, அந்த 3 பேரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ஆண் நண்பரை சரமாரியாக தாக்கியுள்ளனர். படுகாயமடைந்த அந்த நபர், மயக்கமடையவே இளம்பெண்ணை வலுகட்டாயமாக இழுத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதோடு, அங்கிருந்து தப்பிச் சென்றனர். சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்த அவரது ஆண் நண்பர், நடந்த சம்பவம் குறித்து செல்போன் மூலம் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பீளமேடு போலீசார், இளைஞரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அதே பகுதியில் சிறிது தூரத்தில் இருட்டில் அரை நிர்வாண கோலத்தில் மயங்கி கிடந்த இளம்பெண்ணையும் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் பாதிக்கப்பட்ட பெண் 19 வயது கல்லூரி மாணவி என்பதும், அந்த இளைஞர் ஒண்டிப்புதூரில் மெக்கானிக் வேலை செய்து வருகிறார் என்பதும் தெரிய வந்துள்ளது. இதனிடையே அங்கு என்ன நடந்தது? மாணவியை கடத்திச் சென்ற 3 பேர் யார்? அவர்களிடையே என்ன பிரச்சனை ஏற்பட்டது? என்பன குறித்து மாணவி மற்றும் அவருடைய ஆண் நண்பரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க போலீசார் 7 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

Comments are closed.