கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே மாவனட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவராஜ். கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி மஞ்சுளா. இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள். இளைய மகன் ரோகித் (வயது 13) அங்குள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். சம்பவத்தன்று மாணவன் ரோகித்துக்கு உடல் நலம் சரியில்லை என கூறி பள்ளி செல்லவில்லை. மாலை 4 மணியளவில் நண்பர்கள் சிலருடன் கிரிக்கெட் விளையாட சென்ற ரோகித் இரவாகியும் வீட்டிற்கு வரவில்லை. அவனை பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அஞ்செட்டி போலீசில் பெற்றோர் புகார் செய்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது மாணவனை சிலர் காரில் கடத்தி செல்வது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் சிறுவனை தேடும் பணியை தீவிரப்படுத்தினர். இந்தநிலையில், நேற்று( ஜூலை 3) தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள திருமொடுக்கு கீழ்பள்ளம் வனப்பகுதியில் குடிநீர் தொட்டி அருகில் உடலில் பலத்த காயங்களுடன் சிறுவன் பிணமாக கிடந்தான். இது குறித்து தகவல் வந்த போலீசார் சிறுவனின் உடலை மீட்டனர். மேலும், சிறுவனை கடத்த பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். அந்த கார் பதிவு எண்ணை கொண்டு விசாரணையை முடுக்கி விட்டனர். இந்தக் கொலையில் அதே ஊரைச் சேர்ந்த புட்டண்ணன் என்பவரின் மகன் மாதேவன் (21), மாரப்பன் என்பவரின் மகன் மாதேவா (21) ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. புட்டண்ணன் மகன் மாதேவன், 20 வயதுடைய பெண்ணை காதலித்து வந்துள்ளார். அவர் சம்பவத்தன்று பகலில் காதலியுடன் அங்குள்ள ஒரு வீட்டில் உல்லாசமாக இருந்துள்ளார். சிறுவன் ரோகித், அவர்கள் உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்துள்ளான். இதை ரோகித் மற்றவர்களிடம் சொல்லி விடுவானோ என நினைத்த மாதேவன், தனது நண்பனான மாதேவாவிடம் கூறினார். இதையடுத்து 2 பேரும் சேர்ந்து சிறுவன் ரோகித்தை நைசாக பேசி காரில் ஏற்றிக்கொண்டு சென்றனர். அந்த நேரம் அவர்கள் வாங்கி வைத்திருந்த பீரை சிறுவனின் வாயில் ஊற்றி அவனை மயக்கம் அடைய வைத்துள்ளனர். இதன்பிறகு சிறுவனை தேன்கனிக்கோட்டை சாலையில் திருமொடுக்கு கீழ்பள்ளம் பகுதியில் 50 அடி ஆழ பள்ளத்தில் மேலே இருந்து கீழே தூக்கி போட்டு கொடூரமாக கொலை செய்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. இந்நிலையில் 13 வயது சிறுவனை கடத்தி கொலை செய்த வழக்கில் இருவர் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது கல்லூரி மாணவியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
Comments are closed.