இல்லங்களுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் “முதலமைச்சர் தாயுமானவர் திட்டம்”…* திருச்சியில் அமைச்சர் கே என். நேரு தொடங்கி வைத்தார்!
வயது முதிர்ந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் இல்லங்களுக்கு சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்” தொடக்க விழா
சென்னையில் இன்று(ஆகஸ்ட் 12) நடைபெற்றது. இந்தத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார். அதனைத்தொடர்ந்து இந்தத் திட்டத்தினை ஒவ்வொரு மாவட்டத்திலும் தமிழக அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். அந்தவகையில் திருச்சி, உறையூர் நாச்சியார் கோவில் தெருவில் நடைபெற்ற விழாவில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் ரேசன் பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்து இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் குடும்ப அட்டைதாரர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் வே.சரவணன், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், ஆணையர் மதுபாலன், நகர் ஊரமைப்பு குழு உறுப்பினர் வைரமணி, மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜெயராமன், பொது வினியோக திட்ட துணைப்பதிவாளர் மாரிச்சாமி, மண்டல குழுத்தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி, செயற்குழு உறுப்பினர் கவுன்சிலர் காஜாமலை விஜய், மாவட்ட துணைச் செயலாளர் முத்துச் செல்வம், பகுதி செயலாளர்கள் மோகன்தாஸ், இளங்கோ, கவுன்சிலர்கள் கலைச்செல்வி, ராமதாஸ், எஸ்.விஜயலட்சுமி , வட்டச் செயலாளர் வாமடம் சுரேஷ் மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பிறகு,
அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் கூறுகையில், ரேஷன் கடைகளில் மணிக்கணக்கில் காத்துக் கொண்டிருந்த மக்களின் பிரச்சினையை படிப்படியாக சரி செய்து வருகிறோம். வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் இல்லங்களுக்கு சென்று தேவையான குடிமை பொருள் வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் திருச்சி மாவட்டத்தில் 88 ஆயிரம் பேர் பயனடைவார்கள். துப்புரவு தொழிலாளர்கள் நம் தொழிலாளர்கள் அவர்களோடு பேசிக் கொண்டிருக்கிறோம். பேச்சு வார்த்தையில் முடிவு எட்டப்படும். அவர்களை விட்டு விட மாட்டோம். வேற நபர்களை வேலைக்கு எடுக்கும் செயலில் ஈடுபடவில்லை. தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட் அருமையான உத்தரவு போட்டுள்ளது. ஆர்டர் காப்பி வந்தவுடன் இது தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். நான்கரை ஆண்டுகளாக எதுவும் செய்யாமல் கடைசி ஆறு மாதத்தில் அரசு திட்டங்களை செயல்படுத்துகிறீர்கள் என எதிர் கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனவே என்ற கேள்விக்கு, நிதிநிலைமைக் கேற்பதான் ஒவ்வொன்றாக செயல்படுத்த முடியும். ஒரேநாளில் எப்படி செயல்படுத்த முடியும். எந்த அரசாங்கத்தால் செயல்படுத்த முடியும். எத்தனை சதவிகிதம் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்ற கேள்விக்கு. கிட்டத்தட்ட தலைவர் சொன்ன வாக்குறுதிகளை காட்டிலும் சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளோம். எதிர்க்கட்சிகள் தேர்தல் வந்ததால் குறை சொல்கின்றனர். மக்களுடன் ஸ்டாலின் இவ்வளவு வரவேற்பு பெரும் என்று நாங்கள் நினைக்கவில்லை மருத்துவ முகாம் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Comments are closed.