திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை மறுநாள் (9ம் தேதி) இரவு சாலை மார்க்கமாக திருச்சி வருகிறார்.அவர் டிவிஎஸ் டோல் கேட் பகுதியில் உள்ள சுற்றுலா மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கிறார். மறுநாள் (10ம் தேதி) காலை 10 மணிக்கு ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி திமுக எம்.எல்.ஏ. பழனியாண்டி இல்ல திருமண விழாவில் கலந்து கொள்கிறார். இந்த திருமண நிகழ்ச்சி திருச்சி சோமரசம்பேட்டை டாக்டர் கலைஞர் திடலில் நடைபெறுகிறது. அதன் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு, திருச்சி கொட்டப்பட்டு பகுதியில் உள்ள பாவை அறக்கட்டளை தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ‘அன்புச்சோலை’ முதியோர் இல்ல செயல்பாடுகளை தொடங்கி வைக்கிறார். பின்னர், புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வுக்காக கீரனூர் புறப்பட்டு செல்கிறார். கீரனூர் அருகே உள்ள களமாவூர் மூகாம்பிகை பொறியியல் கல்லூரி திடலில் புதிய திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா, முடிவுற்ற திட்டங்களுக்கான திறப்பு விழா, மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு ரூ. 773 கோடியே 19 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் திட்டப் பணிகளை வழங்குகிறார். இந்த நிகழ்ச்சிக்காக மூகாம்பிகை கல்லூரி வளாகத்தில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகையை முன்னிட்டு, திருச்சியில் நவம்பர் 9, 10 ஆகிய இரு நாட்களில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் சரவணன் அறிவித்துள்ளார். தடையை மீறி ட்ரோன்கள் பறக்கவிடப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Comments are closed.