பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் திறப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் மே- 8, 9 தேதிகளில் திருச்சி வருகை…!* பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க அமைச்சர் கே.என்.நேரு அழைப்பு
இரண்டு நாட்கள் பயணமாக திருச்சி வருகை தரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 08.05.2025 அன்று காலை 11 மணியளவில் விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தர உள்ளார். 08.05.2025 மற்றும் 09.05.2025 ஆகிய 2 நாட்கள் திருச்சி மாவட்டத்தில், பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார். கடந்த 4 ஆண்டுகளில் திருச்சி மாவட்டத்திற்கு சுமார் 52,500 கோடிக்கு மேலான வளர்ச்சி திட்டங்களை வழங்கியுள்ளார்.
கடந்த 50 ஆண்டுகளில் திருச்சி மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். 4 ஆண்டுகளில் அனைவரும் ஆச்சரியப்படும் அளவிற்கு திருச்சி மாவட்டத்தில் பல்வேறு அரசு நலத்திட்டங்களை செயல்படுத்தி, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.
8ம் தேதி நிகழ்ச்சிகள்:
08.05.2025 அன்று காலை 11.30 மணியளவில் திருவெறும்பூர் அரசு மாதிரிப் பள்ளி வளாகத்தில் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து அரசு விருந்தினர் மாளிகையில் அரசு அலுவலர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். மாலை 5 மணியளவில் அரசு விருந்தினர் மாளிகையிலிருந்து புறப்பட்டு தலைமை தபால் அலுவலகம், அரசு மருத்துவமனை, 4 ரோடு, தில்லை நகர் வழியாக கலைஞர் அறிவாலயம் சென்றடைகிறார். கலைஞர் அறிவாலயத்தில், கழக நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் மேற்கொள்கிறார். அதன்பின்னர், அரசு விருந்தினர் மாளிகை சென்றடைகிறார்.
பஞ்சப்பூர் பேருந்து நிலையம் திறப்பு:
09.05.2025 அன்று காலை 9 மணியளவில் அரசு விருந்தினர் மாளிகையிலிருந்து புறப்பட்டு மன்னார்புரம் 4 சாலை சந்திப்பு, கிராப்பட்டி, எடமலைப்பட்டிபுதூர் வழியாக சென்று பஞ்சப்பூரில் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திற்கு அருகில் தந்தை பெரியார் திருவுருவச் சிலையினைத் திறந்து வைத்து ரூ.236 கோடி மதிப்பீட்டில் பெரியார் ஒருங்கிணைந்த காய்கறி அங்காடிக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதனைத் தொடர்ந்து, அதற்கு எதிர்ப்புறம் ரூ.129 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா கனரக சரக்கு வாகன முனையத்தை திறந்து வைத்து, அண்ணா திருவுருவச் சிலையினை திறந்து வைக்கிறார். அதன் பின்னர், முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை அடைந்து அவ்வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கழகத் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியினர் திருவுருவச் சிலையினை திறந்து வைக்கிறார். பின்னர், ரூ.408 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை திறந்து வைக்கிறார். பின்னர், பேருந்து வளாகத்தை முழுவதுமாக சுற்றிப் பார்த்து, பொது மக்களுக்கான வசதிகளை பார்வையிடுகிறார். அதனைத் தொடர்ந்து, பேருந்து முனையத்தின் முதல் தளத்தில் நகரப் பேருந்துகளின் இயக்கத்தினை கொடியசைத்து தொடங்கி வைப்பதோடு பேருந்து முனையத்திற்கு அருகில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு பட்டாக்கள் வழங்கி, ரூ.463 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, ரூ.277 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.830 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பிக்கிறார்.
அதன்பின்னர், அரசு விருந்தினர் மாளிகையை சென்றடைகிறார். பின்னர், மாலை 5 மணியளவில் அரசு விருந்தினர் மாளிகையிலிருந்து புறப்பட்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், எம்.ஐ. இ.டி. பொறியியல் கல்லூரியில் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு பின்னர் இரவு விமானம் மூலம் சென்னை சென்றடைகிறார்.
பிரம்மாண்ட வரவேற்பு:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ளும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கழகத் தோழர்கள், பொது மக்கள் அலைகடலென திரண்டு வந்து பிரம்மாண்ட வரவேற்பு அளித்திட அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
Comments are closed.