Rock Fort Times
Online News

வீட்டை மட்டுமின்றி நாட்டையும் காக்க திரண்ட மகளிர் படை…- தஞ்சை மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்…!

தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டிக்கு அருகில் உள்ள திருமலைசமுத்திரம் பகுதியில் “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” தி.மு.க. டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு இன்று(26-01-2026) நடைபெற்றது. தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவருமான கனிமொழி தலைமையில் இந்த மாநாடு நடைபெற்றது. தி.மு.க. முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு முன்னிலையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் தி.மு.க. மகளிர் அணியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது;- “சாதி ஒழிப்பு, பெண் விடுதலைக்காக பாடுபட்டவர் பெரியார். சுயமரியாதை திருமணம் நடத்தியவர் அண்ணா. பேரறிஞர் அண்ணாவின் வழிவந்த கலைஞர் கருணாநிதி, பெண்களுக்கு சொத்துரிமையை வழங்கினார். காவல்துறை, உள்ளாட்சிகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு தந்தவர் கருணாநிதி. நீதிக்கட்சி ஆட்சியில்தான் பெண்களுக்கு முதன்முதலாக வாக்குரிமை வழங்கப்பட்டது. பெண்களுக்காக சமூகநீதி விடுதிகள், தோழி விடுதிகளை திராவிட மாடல் அரசு திறந்துள்ளது. 17 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடன் தரப்பட்டுள்ளது. பெண்களின் தேவைகளை கேட்காமலேயே நிறைவேற்றும் ஆட்சி இது. சாதி ஒழிப்பு மட்டுமே திராவிட இயக்கத்தின் கொள்கை அல்ல, பெண்களின் விடுதலையும்தான். திராவிட இயக்க கோட்டை தஞ்சை. மாமன்னர் ராஜராஜனின் மண் இது. ராணுவ படை போல இங்கே தி.மு.க. மகளிர் அணியின் ‘டெல்டா போர்ஸ்’ பெண்கள் வரவேற்பு தந்தனர். தமிழகத்தை காக்க வேண்டியது வெல்லும் தமிழ்ப் பெண்களின் பொறுப்பு. வீட்டையும், தி.மு.க.வையும் மட்டுமின்றி, நாட்டையும் காக்க மகளிர் படை திரண்டுள்ளது. மகளிர்தான் எப்போதும் பவர் ஹவுஸ். தி.மு.க.வின் திட்டங்களை கட்சியின் மகளிர் குழுவினர் ஒவ்வொரு வீட்டிற்குள் சென்று பிரசாரம் செய்யுங்கள்.” இவ்வாறு அவர் பேசினார். மாநாட்டில் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்