தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் ஆகிய 4 மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும் இந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகளை (எஸ்.ஐ.ஆர்) கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 4ம் தேதி தேர்தல் ஆணையம் நடத்தி வந்தது. இதனையடுத்து தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று (பிப்.23) வெளியிடப்பட்டது. இந்நிலையில், இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் நாளை (25.02.2026) தமிழகம் வருகிறார். 25 முதல் பிப்ரவரி 27-ம் தேதி வரை 3 நாள் பயணமாக தமிழகம் வரும் அவருடன், 7 துணை தேர்தல் ஆணையர்களும் உடன் வருகின்றனர். இந்தப் பயணத்தின் போது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான தேர்தல் ஆயத்தப் பணிகள் குறித்து இந்த குழுவினர் விரிவான ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். அதன்படி, சென்னையில் பிப்ரவரி 27ம் தேதி அரசு அதிகாரிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ஆலோசனை நடத்துகிறார். இவரது தமிழ்நாடு வருகையைத் தொடர்ந்து தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments are closed.