செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் பொது மருத்துவமனையில் கடந்த மாதம் 30 ந் தேதியன்று,சிங்க பெருமாள் கோவிலைச் சேர்ந்த சங்கர் என்ற இளைஞர் வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்டார்.தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த சங்கர்,குடிப்பழக்கம் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மறுவாழ்வு மையத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இந்த ஆண்டு ஜனவரி வரை அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்,மறுவாழ்வு மையத்தில் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக அவர், பல் துளக்குவதற்கு பயன்படுத்தப்படும் டூத் பிரஸ்,ஜிப்,துணி,பிளாஸ்டிக் இழைகள் போன்று உண்ணதகாத பொருட்களை விழுங்கியுள்ளார், இதன் காரணமாக இரண்டு மாத காலமாக கடும் வயிற்று வலி ஏற்பட்டது, அதற்காக பல்வேறு தனியார் மருத்துவமனைக்கு சென்றும் வயிற்று வலிக்கு தீர்வு காணப்படாத நிலையில், கடந்த மாதம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிடி ஸ்கேன் மற்றும் என்டோஸ்கோபி செய்து அவரது வயிற்றில் பல் துலக்கி, பிளாஸ்டிக் குச்சி, சில கிழிந்த துணி, பேன்ட் ஜிப் போன்ற பல்வேறு பொருட்கள் இருப்பதை கண்டறிந்தனர். இதனை தொடர்ந்து அவருக்கு இம்மாதம் 2 ந் தேதி செங்கல்பட்டு பொது அறுவை சிகிச்சை மருத்துவர்கள் சங்கரின் வயிற்று பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு,இரைப்பையிலிருந்த பொருட்களை அகற்றியுள்ளனர்.இதனை தொடர்ந்து பாதிப்புக்குள்ளான சங்கர் தற்பொழுது நல்ல நிலையில் உள்ளதாகவும்,அவருக்கு தற்போது மனநல சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் விரைவில் சங்கர் வீடு திரும்புவார் என்றும் செங்கல்பட்டு மருத்துவமனை முதல்வர் நாராயணசாமி தொிவித்தாா்.