Rock Fort Times
Online News

தமிழகத்தில் நெல் ஈரப்பதத்தை ஆய்வு செய்யும் மத்தியக்குழு பயணத்திட்டத்தில் மாற்றம்…!

நெல் கொள்முதல் செய்யும் அதிகபட்ச ஈரப்பதம் 17 சதவீதம் என்று மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. தற்போது தமிழகத்தில் பலத்த மழை பெய்து வருவதால், ஈரப்பதத்தின் அளவை 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, ஈரப்பதத்தின் அளவை ஆய்வு செய்ய உணவுத் துறையின் இருப்பு மற்றும் ஆராய்ச்சி மைய துணை இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்குநர் தலைமையில் தலா 2 தொழில்நுட்ப அலுவலர்களுடன் 3 குழுக்களை மத்திய அரசு அமைத்தது. 3 குழுக்களும் இணைந்து ஆய்வு செய்து அதன் முடிவுகளை மத்திய அரசிடம் அறிக்கையாக அளிக்கும். இந்த குழுக்கள் நேற்று (அக்.24), நாளை (அக்.26) ஆகிய நாட்களில் கள ஆய்வு நடத்தும் என்று அறிவிக்கப்பட்டது. முதல் குழு இன்று (அக்.25) செங்கல்பட்டு மாவட்டத்திலும், நாளை (அக்.26) திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செல்கிறது. 2வது குழு இன்று தஞ்சை, மயிலாடுதுறை, அக்.26ல் திருவாரூர், நாகை, அக் 27ல் கடலூர் மாவட்டங்களிலும் ஆய்வு செய்யும் என்றும், 3வது குழுவானது இன்று திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களிலும், நாளை (அக்.26) மதுரை, தேனி மாவட்டங்களிலும் ஆய்வு செய்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்று தஞ்சை உள்ளிட்ட காவிரி படுகை மாவட்டங்களில் நடைபெறுவதாக இருந்த மத்தியக் குழுவின் ஆய்வு பயணத்தில் தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. செறிவூட்டப்பட்ட அரிசி ஆலையை ஆய்வு செய்வதற்காக நாமக்கல்லுக்கு ஒரு குழு சென்றுள்ளது. இதேபோன்று கோவையில் ஆய்வு நடத்த திருச்சியில் இருந்து ஒரு மத்திய குழு புறப்பட்டது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்