ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மரணம் அடைந்ததை தொடர்ந்து, இந்த தொகுதிக்கு பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. திமுக சார்பில் வி.சி. சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் மா.கி. சீதாலட்சுமி என 46 பேர் போட்டியிட்டனர். முக்கிய எதிர்க்கட்சிகளான அதிமுக, தேசிய கட்சியான பாஜக, தேமுதிக, தவெக உள்ளிட்டவை இந்த இடைத்தேர்தலைப் புறக்கணித்தன. இந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 8 -ம் தேதி எண்ணப்பட்டது. இதில் 1,17,158 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் சந்திரகுமார் வெற்றிபெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி 23,872 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவியுள்ளார். மொத்தம் பதிவான வாக்குகளில் 6-ல் ஒரு பங்கு வாக்கு பெறுவோர் டெபாசிட் தொகையை தக்க வைப்பர். அதன்படி ஈரோடு இடைத்தேர்தலில் டெபாசிட் தொகை பெறுவதற்கு 25,777 வாக்குகள் பெற வேண்டிய நிலையில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாக்குகளை பெற முடியாததால் நாம் தமிழர் கட்சி டெபாசிட் இழந்துள்ளது. அதேசமயம் 75% வாக்குகளை பெற்று திமுக மகத்தான வெற்றி பெற்றது. இந்தநிலையில் இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரகுமாருக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் சபாநாயகர் அப்பாவு சட்டமன்ற உறுப்பினராக பதவி பிரமாணம் செய்து வைத்தார்.அப்போது அமைச்சர்கள், கே.என்.நேரு, எ.வ.வேலு, முத்துசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Comments are closed.