நடந்து சென்றவரிடம் செல்போன் பறிப்பு: மீட்டுத் தந்த பெண் போலீசுக்கு குவியும் பாராட்டுக்கள்…! ( வீடியோ இணைப்பு)
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், பிச்சாண்டார் கோவிலை சேர்ந்தவர் முத்துச்செல்வம். இவர், கடந்த 2022 ஆம் ஆண்டு சமயபுரம் டோல்கேட் அருகே செல்போனில் பேசியவாறு நடந்து சென்றபோது இரு சக்கர வாகனத்தில் வேகமாக வந்த மர்ம நபர்கள், செல்போனை கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து கொள்ளிடம் காவல் நிலையத்தில் முத்து செல்வம் புகார் அளித்தார். புகாரின்பேரின் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனாலும் இரண்டு ஆண்டு காலம் ஓடியும் களவு போன செல்போனும், அதனை பறித்துச் சென்ற மர்ம நபர்கள் யார் என்பதும் தெரியவில்லை. இந்தநிலையில் செல்போனை பறிகொடுத்த முத்துச்செல்வம் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமாரை நேரில் சந்தித்து செல்போனை கண்டுபிடித்து தருமாறு மனு அளித்தார். எஸ்பி உத்தரவின்பேரில் சைபர் கிரைம் காவலர் நதியா களத்தில் இறங்கி செல்போன் குறித்த தகவல்களை திரட்டி, தீவிர விசாரணை மேற்கொண்டபோது செல்போன் இரண்டு வருடங்களுக்கு முன்பு திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள பழைய செல்போன் கடையில் மர்ம நபர்களிடம் இருந்து விலைக்கு வாங்கப்பட்டு மற்றொரு நபருக்கு விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து செல்போனை பயன்படுத்தி வந்த நபரிடம் இருந்து செல்போன் மீட்கப்பட்டு முத்து செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மர்ம நபர்களால் பறித்து செல்லப்பட்ட செல்போனை கண்டுபிடித்து ஒப்படைத்த காவலர் நதியா மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் ஆகியோருக்கு முத்துச்செல்வம் நன்றி தெரிவித்துக் கொண்டார். மேலும், செல்போனை மீட்டுக் கொடுத்த பெண் போலீசுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
Comments are closed.