இந்திய பவுலர்களின் சுழலில் சிக்கி சின்னாபின்னமானது நியூசிலாந்து- வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டுகளை அள்ளினார்…!
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறது. இதன் முதலாவது டெஸ்டில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில் 2-வது டெஸ்ட் போட்டி புனே யில் இன்று(24-10-2024) தொடங்கியது. டாஸ் ஜெயித்த நியூசிலாந்து அணி பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இந்திய சுழல் பந்து வீச்சாளர்கள் நியூசிலாந்து அணிக்கு கடுமையான குடைச்சல் கொடுத்தனர். லதாம் 15 ரன்களில் அஸ்வின் சுழலில் சிக்கினார். அவரை தொடர்ந்து வில் யங்கையும் அஸ்வின் காலி செய்தார். பின்னர் கை கோர்த்த கான்வே – ரச்சின் ரவீந்திரா இணை அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தது. இருவரும் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்து அசத்தினர். இந்த கூட்டணியை அஸ்வின் உடைத்தார். கான்வே 76 ரன்களில் வீழ்ந்தார். இதன் பின் நியூசிலாந்து அணி வாஷிங்டன் சுந்தரின் சுழலில் மொத்தமாக வீழ்ந்தது. ரச்சின் ரவீந்திரா 65 ரன்களில் ஆட்டமிழக்க பின் வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கடைசி 7 விக்கெட்டுகளையும் வாஷிங்டன் சுந்தர் கபளீகரம் செய்தார். முடிவில் நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 259 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டுகளும், அஸ்வின் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர். இதனையடுத்து இந்தியா தனது முதல் இன்னிங்சை
தொடங்கியது.
Comments are closed.