அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 11-ந்தேதி நடந்தது. இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதனை எதிர்த்து சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில், அதிமுக தொண்டர் எனக் கூறி திண்டுக்கலைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதில், “அதிமுக விதிகளின்படி பொதுச்செயலாளரை உறுப்பினர்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால், எடப்பாடி பழனிசாமி அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படவில்லை. பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதால், அவரது தேர்வு செல்லாது என்று அறிவிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். இந்த வழக்கு உரிமையியல் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்தார். ஆனால், அவரது மனுவை உரிமையியல் கோர்ட்டு கடந்த ஜூலை மாதம் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், எடப்பாடி பழனிசாமி மேல்முறையிட்டு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் இன்று(04-09-2025) தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை ஐகோர்ட்டு அறிவித்திருந்தது. அதன்படி, எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கு எதிரான இந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு நிராகரித்து உத்தரவிட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி மனுவை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்த உத்தரவை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்தது.
Comments are closed.