ஆன்மீகப் பயணம் என்று கூறிவிட்டு டெல்லியில் இருந்து தமிழக அரசியலை சூடாக்கும் கே.ஏ.செங்கோட்டையன்…! அமித்ஷாவை தொடர்ந்து நிர்மலா சீதா ராமனுடனும் சந்திப்பு…!
அதிமுக மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன், அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை 10 நாட்களுக்குள் ஒன்றிணைக்க வேண்டும், இல்லை என்றால் வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற வாய்ப்பில்லை என கருத்து தெரிவித்தார். அவரது கோரிக்கையை ஏற்காத கட்சித் தலைமை, அவரிடம் இருந்து அமைப்புச் செயலாளர், மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பதவிகளை பறித்தது. மேலும், அவரது ஆதரவாளர்களின் பதவிகளையும் கட்சி தலைமை பறித்தது. இந்நிலையில், கே.ஏ.செங்கோட்டையன் கோவையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஹரித்துவாரில் உள்ள ராமர் கோயிலுக்குச் செல்கிறேன். மனம் சரியில்லாததால் கோயிலுக்குச் செல்கிறேன். பாஜக தலைவர்கள் யாரையும் சந்திக்க செல்லவில்லை என்று கூறினார். ஆனால், அதற்கு மாறாக டெல்லி சென்றதும் அமித்ஷா இல்லத்துக்கு சென்று அவரை சந்தித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனைத்தொடர்ந்து தற்போது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசி உள்ளதாக சொல்லப்படுகிறது. அவர்கள் எதற்காக சந்தித்தார்கள்?, என்ன பேசினார்கள் என்ற விவரம் முழுமையாக தெரியவில்லை. கோவிலுக்கு சென்று வருவதாக கூறி சென்ற கே.ஏ.செங்கோட்டையன், அங்கு அடுத்தடுத்து பாஜக நிர்வாகிகளை சந்தித்து பேசி வருவது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Comments are closed.