திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள அம்பேத்கர் நகர் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (வயது 50). தனியார் பஸ் ஒன்றில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் வீரமுத்து ( 52 ). கொத்தனார். இவரது மனைவி லட்சுமி (45). லட்சுமிக்கும், ரமேஷ் குமாருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரமேஷ்குமார் நேற்று இரவு அந்த பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே லட்சுமியை கன்னத்தில் அறைந்ததாக சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக வீரமுத்துவிற்கும், ரமேஷ்குமாருக்கும் பிரச்சனை ஏற்பட்டதாகவும், அப்போது அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ரமேஷ்குமார் வீட்டின் எதிரே உள்ள ரயில்வே தண்டவாளம் அருகே கத்திக்குத்து காயங்களுடன் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருவெறும்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரமேஷ் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிந்து வீரமுத்து மற்றும் லட்சுமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.