திருச்சி விமான நிலையத்திலிருந்து இலங்கை, மலேசியா, மஸ்கட், ஓமன், துபாய், சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு வெளி நாடுகளுக்கும், அதே போன்று பெங்களூர், சென்னை, புதுடெல்லி உள்ளிட்ட பெரு நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. நாள்தோறும் 34 விமான சேவைகள் உள்ளதால் வெளிநாடு மற்றும் உள்நாட்டு பயணிகள் அதிக அளவில் வந்து செல்கிறார்கள். இந்தநிலையில் இன்று ( 20.10.2023 ) அதிகாலை 2.32 மணிக்கு திருச்சி விமான நிலைய முனைய மேலாளர் எண்ணுக்கு வாட்ஸ்அப் மெசேஜ் வந்தது. அதில், சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த சங்கீதா வேலப்பன் என்ற பெண்மணி திருச்சி விமான நிலையத்திற்கு வரும் விமானங்களில் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களும், வெடிகுண்டுகளும் கொண்டு வருவதாகவும் , சற்று நேரத்தில் வெடிகுண்டு வெடிக்கும், உடனடியாக சோதனை மேற்கொள்ளுங்கள் என சொல்லப்பட்டு இருந்தது.
இதுகுறித்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வெடிகுண்டு நிபுணர்களுடன் விமான நிலையம் முழுவதும் சோதனை மேற்கொண்டனர். ஆனால், வெடிகுண்டு ஏதும் கண்டறியப்படவில்லை. மேலும் வாட்சப் மெசேஜ் அனுப்பிய சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிய வந்தது. எனவே, அவர் மீது வழக்கு ஏதும் பதிவு செய்யாமல் இதுபோன்ற செயல்களில் இனி ஈடுபடக் கூடாது என எச்சரிக்கை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தால் திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.